பிப்ரவரி 12ல் '3 ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்!

'3 ஜி' எனப்படும் மூன்றாம் தலைமுறைக்கான செல்போன் சேவையை வழங்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் ஒதுக்கீட்டுக்கான ஏலத் தேதியை நிர்ணயிப்பதில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. பாதுகாப்புத் துறைக்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் நிலவி வந்த பனிப்போரே இதற்குக் காரணம்.
ஒருவழியாக பாதுகாப்புத் துறை, எல்லைப்புறங்களில் '3 ஜி' அலைக் கற்றைகள் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுவிட்டது.
இதனால் ஏலம் விடுவதில் நீடித்த முட்டுக் கட்டை விலகியது.
'3 ஜி' ஏல விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி வரை பெறப்படும் என்றும், விண்ணப்பம் அளித்தவர்களில் தகுதியுடையவர்கள் பிப்ரவரி 5ல் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் ஏலதாரர்கள் மட்டும் முறையான ஏலத்தில் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு, டெல்லி, குஜராத்,மும்பை, மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளுக்கான '3 ஜி' ஒதுக்கீட்டு ஏலத்துக்கு குறைந்தபட்ச தொகை (ரிசர்வ் பிரைஸ்) ரூ.320 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மேல் அதிக விலை வைத்து ஏலம் கோருபவர்களுக்கு உரிய ஒதுக்கீடு அளிக்கப்படும்.
இந்த ஒதுக்கீடு பெற்றவர்கள் ஏலத் தொகையில் 25 சதவீதத்தை ஏல நாளில் இருந்து 5 நாளுக்குள்ளும், மீதி 75 சதவீதத்தை அடுத்த 25 நாளுக்குள்ளும் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications