அமராவதி அணைக்கு நீரை தடுக்க கேரளம் புது அணை!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டின் நதி நீர் வாழ்வாதாரங்களுக்குத் தீங்கான கேடு செய்யும் வகையில், கேரள அரசு செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அராஜகப் போக்கை மேற்கொண்டு உள்ள கேரள அரசு, தற்போது, கொங்குச் சீமையிலும் நமக்குக் கேடு செய்ய முற்பட்டு விட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு, கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, தமிழக எல்லையில் உள்ள சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
1956ம் ஆண்டு இந்த அணை நீர்ப் பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.
அணை கட்டுவதற்கு முன்பே உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருந்து கரூர் வரை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, சுமார் 30,000 ஏக்கர் பாசனம் பெற்று வந்தது.
அமராவதி அணை கட்டிய பின்னர், புதிதாக 25,000 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் இந்தத் தண்ணீரால், மூலம் 30க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பல கிராமங்களுக்கும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தமிழக-கேரள எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள, மறையூர் அருகே ரூ.230 கோடி செலவில் புதிய அணைகட்ட கேரள அரசு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் குறுக்கே, 110 ஏக்கர் பரப்பளவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்த அணையின் மூலம் சுமார் 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாகக் கூறும் கேரள அரசு, இதற்கான இறுதிக்கட்ட சர்வேயை முடித்துள்ளது.
பாம்பாற்றின் வழித்தடத்தில் உள்ள தூவானம் அருவிக்கு மேல்புறம் 170 மீட்டர் நீளமும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவது எனவும், நான்கு ஆண்டுகளில் அணையைக் கட்டி முடித்து விடுவது எனவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஜனவரி 6ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச் சூழல் துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
மின்சாரம் தயாரிக்கத்தான் அணை கட்டுகிறோம் என கேரள அரசு சொல்வது ஏமாற்று வேலை. தனியார் குளிர்பானக் கம்பெனிகளின் வசதிக்காகத்தான் இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே காவிரியின் உப நதிகளில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணைப் பகுதி, காவிரி நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட வழக்கின் ஒரு பகுதி ஆகும். அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சி இது.
இதனால் ஏறத்தாழ 60,000 ஏக்கர் தமிழக விவசாய நிலங்கள், குடிநீரை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் பாலைவனமாகி விடும்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்துள்ள, சுமார் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும்.
தொடக்கத்திலேயே இதைத் தடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் அமைச்சரகம், அனுமதி தரக்கூடாது.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில், மத்திய அரசு, தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக, புதிய அணை கட்ட, ஆய்வுக்கு அனுமதி அளித்த துரோகத்தை, பாம்பாற்றுப் பிரச்சனையிலும் செய்து விடக்கூடாது என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications