பிரபாகரனின் தாயாரை தமிழகத்திற்கு அனுப்ப ராஜபக்சே சம்மதம்
கொழும்பு: இந்தியா ஒப்புக்கொண்டால் பிரபாகரனின் தாயார் தமிழகத்திற்கு சென்று வசிக்க அனுமதி அளிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணமடைந்த நிலையில், அவரின் தாயாரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பிரபாகரனின் உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரபாகரனின் தாயாரை பராமரிக்க தயாராக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் விருப்பம் தெரிவித்தனர்.
எனினும் பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் தங்களின் விருப்பம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கொழும்பு நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ராஜபக்சேவிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராஜபக்சே, 'இந்தியா ஒப்புக்கொண்டால், பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் அங்கு செல்லலாம்' என தெரிவித்தார்.
பல்கலை மாணவர்கள் மாயம்:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போருக்கு பின், பல்கலைக்கழக மாணவர்கள் 140 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. காணாமல் போன மாணவர்களின் நிலை குறித்து இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications