பொங்கல்-சென்னையில் 5,000 போலீஸார் பாதுகாப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் மிக பலத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், பழைய டயர்கள், டியூப்கள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்றை மாசுப்படுத்தும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியதாகும். மேலும் குடிசைப் பகுதிகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவற்றில் தீ விபத்து ஏற்பட வழி வகுக்கும். எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எனினும் மாட்டுச்சாணம், பழைய மரக்கட்டைகள் போன்றவற்றை பாதுகாப்பாக எரித்து போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இல்லை.
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் மெரீனா போன்ற கடற்கரைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் மூடல்:
15ம் தேதி திருவள்ளூவர் தினத்தன்று மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. 16ம் தேதி காணும் பொங்கலையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் உடைந்த கப்பல் உள்ள பகுதியிலும், மெரீனா கடலிலும் மக்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கடலில் படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கடற்கரை பகுதிகளில் 35 மீனவர்கள் அடங்கிய உயிர் காக்கும் நீச்சல் மீட்புக் குழுக்களும், முதலுதவி அளிக்க மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அதிக நகைகளை போட்டு வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூக விரோதிகள் மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கையும், களவுமாக பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
அவசர உதவிக்கு 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் தகவல் கொடுக்கும்படி காவல்துறை கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளுவர் தினமான வரும் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பர்மிட் ரூம்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
எனவே, அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்ய கூடாது. தவறினால் மதுபான விதியின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications