20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சென்னை: சென்னை தலைமைச் செயலக குண்டுவெடிப்பு சதிதிட்ட வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தமிழர் பாசறை அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தமிழர் பாசறை அமைப்பின் தலைவர் இளங்கோ மற்றும் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதுவரை சதீஷ் என்கிற வடிவேல், அப்துல்கலாம், ராஜா என்கிற அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரன் என்கிற ஆழ்வார், சந்திரன் என்கிற சொக்கலிங்கம் என்கிற சொக்கர் ஆகியோர் மரணம் அடைந்துவிட்டனர்.
இவ்வழக்கில் இளங்கோ, திருமாவளவன், செல்வம், அரிமா நம்பி, சண்முக சுந்தரம், சிதம்பரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.
இவர்களில், சிதம்பரம் நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சிதம்பரம், கடந்த 1993ம் ஆண்டில் இலங்கைக்கு சென்று விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்று அவர்களுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார் என்றும், 2008ம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ்நாடு திரும்பினார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications