'ஆந்திராவில் ஐ.டி. நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்'!
சென்னை: 'முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நிம்மதியாக நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க முடியவில்லை' என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா வருத்தத்தோடு கூறினார்.
தெலுங்கானா பிரச்சனை காரணமாக ஆந்திர மாநிலம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
தெலுங்கானா தனி மாநில ஆதரவு மற்றும் எதிர்ப்பு என ஆந்திரா பிளவுபட்டு, இருதரப்பினரும் போட்டிபோட்டு நடத்தும் போராட்டங்களால் ஒட்டு மொத்த மாநிலமே ஸ்தம்பித்தது.
மறியல், ஆர்ப்பாட்டம், பேரணி, கடையடைப்பு என தொடர் போராட்டங்களோடு வன்முறைகளும் அரங்கேறியதால் வங்கிப் பணிகள் முதல் காய்கறி போக்குவரத்து வரை பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான முதலீட்டில் தொடங்கப்பட்ட பிபிஓ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் பணியாளர் போக்குவரத்து, வங்கி நடவடிக்கைகள் என பல விதத்திலும் சிரமங்களை சமாளிக்க முடியாமல் தவிப்பதாக கூறின.
கடந்த சில நாட்களில் ஹைதராபாத் நகரில் நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தாக்கப்பட்டதாகவும், இதனால் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆந்திர அமைச்சர்கள் தானம் நாகேந்தர், முகேஷ்கவுடு ஆகியோர் கூறியுள்ளனர்.
மாநிலத்தில் அமைதி திரும்பிவிடும் என்றும் நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முதலீட்டாளர்களை சந்தித்து முதல்வர் ரோசய்யா உத்தரவாதம் அளித்து வருகிறார்.
இதற்கென பிரத்தியேகமாக ஐஎப்எஸ் அதிகாரிகளை வரவழைத்து அவர்கள் மூலம் உத்தரவாதம் அளிக்கும் முயற்சிகளிலும் ரோசய்யா இறங்கியுள்ளார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ரோசய்யா, 'ஆந்திர முதல்வராக நான் பதவி ஏற்று 4 மாதங்கள் ஆகின்றன. பதவி ஏற்ற நாள் முதல் அடுத்தடுத்து பிரச்னைகள் எழுகின்றன.
நிம்மதியாக நாற்காலியில் உட்கார்ந்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கக் கூட எனக்கு நேரமில்லை. இந்த பிரச்னைகள் எனக்கு எதிராக தூண்டிவிடப்பட்டவை என்று நான் நினைக்கவில்லை.
இதில் பல பிரச்னைகள் கொஞ்சம் காலமாகவே இருந்தன. ஆனால், திடீர் திடீரென்று புதிதாக பிரச்னைகள் ஏற்படுவதால் அதை சமாளிக்கவே நேரம் போதவில்லை.
இதற்கிடையே ஆந்திராவின் நிதி நிலைமை வேறு மோசமாக உள்ளது. நிதி சிக்கலை தீர்க்க புதிதாக வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து பரிசீலித்து வருகிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications