சட்டசபையில் என்னை அவமானப்படுத்திவிட்டனர்-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான என்னை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்திவிட்டனர். தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் இந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டது கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டப் பேரவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த 11ம் தேதி கலந்து கொண்டு எனது கருத்துகளை தெரிவித்து விவாதத்தை நான் முடித்து வைத்தேன்.

எவ்வளவு முடியுமோ..

என்னுடைய விவாதத்தில், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், ஒவ்வொரு திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீரழிவையும் சுட்டிக்காட்டினேன். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக என்னை இரண்டு சொற்றொடர்கள் கூட பேசவிடாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர்.

பேரவையின் விதிகளையும், மரபுகளையும் மீறி, எதிர்க்கட்சித் தலைவரை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தினர். தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் இந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டது கிடையாது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இது தான் நடந்து வருகிறது.

பதில் வணக்கம் கூட சொல்லலை...

பொதுவாக ஒவ்வொரு உறுப்பினரும் பேரவைக்குள் நுழையும் போது பேரவைத் தலைவருக்கு வணக்கம் சொல்வது மரபு. பதிலுக்கு பேரவைத் தலைவரும் வணக்கம் சொல்வது மரபு. இது ஒரு தனிப்பட்ட நபருக்கு கொடுக்கப்படும் மரியாதை அல்ல, பேரவைத் தலைவர் என்ற பதவிக்கு கொடுக்கப்படும் மரியாதை. மேலும், ஒருவர் வணக்கம் தெரிவித்தால் அதற்குப் பதில் வணக்கம் தெரிவிப்பது தமிழ்ப் பண்பாடு.

அந்த வகையில், நான் பேரவைக்குள் நுழைந்த போதும், பேரவையை விட்டு வெளியேறும் போதும் வணக்கம் தெரிவித்தேன். ஆனால், மரபுப்படி தெரிவிக்க வேண்டிய பதில் வணக்கத்தைக் கூட பேரவைத் தலைவர் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பேரவைத் தலைவர் அவையை நடுநிலையோடு நடத்துவார் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

பரிதி மீது பாய்ச்சல்:

அமைச்சராக இருக்கும் பரிதி இளம்வழுதி, தான் வகிக்கும் அமைச்சர் பதவியையும் மறந்து நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சித் தலைவரை தாக்கும் விதத்தில், அவமானப்படுத்தும் விதத்தில் மரபு மீறி பேசுகிறார். ஒரு கட்டத்தில் பரிதி இளம்வழுதி ஒருமையில் பேசியது அவரது தரத்தின் உச்சகட்டம். முதல்வரோ அல்லது அவை முன்னவரோ பரிதி இளம்வழுதியின் பேச்சை தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.

அடுத்தபடியாக, காவல் துறை சார் ஆய்வாளர் வெற்றிவேல் பட்டப்பகலில் வெடிகுண்டு மற்றும் அரிவாளால் தாக்கப்பட்டதையும், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவரைக் காப்பாற்ற அங்கிருந்த அமைச்சர்கள் முன்வராததையும், அமைச்சர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இதர அதிகாரிகள் அங்கிருந்ததையும் பல்வேறு தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.

இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அமைச்சர்களின் இந்தச் செயலை நான் சட்டப்பேரவையில், நாட்டு நலனை முன்னிட்டு, நல்ல தமிழில் எடுத்துக் கூறியவுடன், அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் உடனடியாக நீக்கிவிட்டார்.

மகாமகம் சம்பவம்-நான் அங்கு இல்லை:
அதே சமயத்தில் அமைச்சர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தினால் அதை நீக்க பேரவைத் தலைவர் மறுக்கிறார். ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலை காப்பாற்ற ஏன் முன்வரவில்லை? உடனடியாக ஏன் உதவி செய்யவில்லை? என்று கேட்டதற்கு மகாமகம் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசுகிறார் ஓர் அமைச்சர்.
மகாமகம் குளத்தில் நடைபெற்ற சம்பவம் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தின்போது நான் அந்த இடத்தில் இல்லை. நான் சென்னைக்கு திரும்பிய பிறகு தான் எனக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அலகாபாத்தில் கும்பமேளா நடந்த போது முன்னாள் பிரதமர் நேரு அங்கு சென்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர்கள் உயிரிழந்தனர். அதற்காக அவரை யாரும் குறை கூறவில்லை.

எனக்கு ஈவு-இரக்கம் அதிகம்:

என்னைப் பொறுத்தவரையில் ஈவு, இரக்கம் மனிதாபிமானம் ஆகியவை எனக்கு நிறையவே உண்டு. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக என்னால் முடிந்த உதவிகளை செய்திருப்பேன்.

என் மனிதாபிமானம்:

18.12.2005 அன்று சென்னை மாநகர், எம்.ஜி.ஆர். நகர், அறிஞர் அண்ணா மாநகராட்சி உயர் நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண உதவி மையத்தில் சில நபர்கள் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நான் மருத்துவமனைக்குச் சென்ற போது, பிணவறையில் உள்ள ஒருவரின் உடலில் சில அசைவுகளைக் கண்டேன். உடனடியாக அந்த நபருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். இதன் விளைவாக அந்த நபர் காப்பாற்றப்பட்டார். இதை பாதிக்கப்பட்ட நபரே விசாரணை ஆணையத்தின் முன்பு கூறியிருக்கிறார். இதிலிருந்தே என்னுடைய மனிதாபிமானத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எப்படி இருந்தாலும், காவல் துறை சார் ஆய்வாளர் வெற்றிவேல் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கும், மகாமகம் சம்பவத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஏனெனில், வெற்றிவேல் கொலை சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் திமுக அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், மகாமகம் சம்பவத்தின் போது நான் அந்த இடத்தில் இல்லை. நான் சென்னை வந்தடைந்த பிறகு தான் அந்தச் சம்பவம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

தரம் தாழ்ந்து பதில் அளிக்கிறார்:

சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு ஆறுதல் கூறாமல் மருத்துவமனைக்குச் சென்றுவிட்ட கருணாநிதியின் அமைச்சரவையில் இருப்பவர்களிடம் இருந்து மனிதாபிமானமற்ற செயலைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் தான் திருட்டு வி.சி.டி. தொழில் ஒரு குற்றமாக குண்டர்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்றும், இதன் விளைவாக திருட்டு வி.சி.டி. தொழில் அறவே ஒழிக்கப்பட்டது என்றும், ஆனால் தற்போது அந்தத் தொழிலை திமுகவைச் சேர்ந்த இரண்டு அதிகார மையங்கள் நடத்துகின்றன என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றும் சொன்னால், “நீங்கள் தான் திருட்டுத் தொழிலை நடத்திக் கொண்டிருந்தீர்கள். நீங்களே ஆட்சிக்கு வந்துவிட்ட காரணத்தினால் அப்போது அந்தத் தொழில் இல்லை" என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி தரம் தாழ்ந்து பதில் அளிக்கிறார்.

இதை நீக்க வேண்டியது பேரவைத் தலைவரின் கடமை இல்லையா?. ஆனால், இதை பேரவைத் தலைவர் அனுமதிக்கிறார். மரபு பற்றி பேசுபவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், நான் திருட்டு வி.சி.டி. தொழில் குறித்து கூறினால், ஆதராம் இருந்தால் சொல்லுங்கள் என்கிறார் பேரவைத் தலைவர். அப்படி என்றால் பரிதி இளம்வழுதி ஆதாரத்துடன் தான் பேசுகிறாரா? ஆளும் கட்சி என்றால் ஒரு தீர்ப்பு, எதிர்க்கட்சி என்றால் ஒரு தீர்ப்பா?.

கோடநாடும்.. திராட்சை தோட்டமும்:

கோடநாட்டில் நான் தங்கியதை பற்றி அமைச்சர் பொன்முடி இந்த கூட்டத் தொடரில் பேசியதால் தான் கோடநாட்டில் தங்குவதில் என்ன தவறு?" என்று நான் கூறினேன். ஆனால், இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் “ஹைதராபாத்தில் திராட்சை தோட்டத்தில் தங்கினீர்களே?" என்று கூறினார். ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் நான் திரையுலகுக்கு வந்த பிறகு உழைத்து சம்பாதித்த பணத்தில் 1967ம் ஆண்டு வாங்கியது. பெங்களூரில் உள்ள பண்ணை வீடு போல் அரசியலில் சம்பாதித்து வாங்கியது அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப் பேரவைக்கு நான் செல்லவில்லை என்றால், அனைத்து பத்திரிக்கைகளும் நான் சட்டப்பேரவைக்கு செல்லவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய கடமையை ஆற்றவில்லை என்றும் எழுதுகின்றன. சட்டப்பேரவைக்குச் சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினால், எந்தப் பத்திரிக்கையும் அதை சரியாக வெளியிடுவதில்லை.

'88 வயது முதியவர்':

நான் என்னுடைய விவாதத்தை முடித்து பேரவையில் இருந்து வெளியேறிய பின், நிதி அமைச்சரும், 88 வயது முதியவரும், பேரவையின் மூத்த உறுப்பினருமான அன்பழகன் எழுந்து, “பேரவையில் இருந்து அவர் வெளியேறுகிறார். அவர் நாட்டில் இருந்தே வெளியேறும் காலம் வரும்" என்று தெரிவிக்கிறார். அவரது தரத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்!

இதே அன்பழகன் எதிர்க்கட்சித் தலைவராக எனது ஆட்சிக் காலத்தில் இருந்த போது எனக்கு எதிரே முன் வரிசையில் அமர்ந்திருப்பார். அவரின் சுயரூபம் தெரியாமல் அவருக்கு உரியதைவிட அதிகமாகவே மரியாதையை எங்கள் தரப்பிலிருந்து அளித்தோம். அவர் பேசுகிறார் என்றால் யாருமே குறுக்கிட மாட்டார்கள். நானும் குறுக்கிட மாட்டேன். அப்போது பேரவைத் தலைவராக காளிமுத்து இருந்தார். அவரும், அவருக்கு உரிய மரியாதையை அளித்தார். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு நாங்கள் அளித்த மரியாதையை அடியோடு மறந்து, என்னை இப்படி கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் அன்பழகன்.

நான் தமிழகத்தின் குடிமகள்:

நான் தமிழகத்தின் குடிமகள். இந்திய நாட்டினுடைய பிரஜை. எனக்கு தமிழகத்தில் வசிப்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏதோ எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சட்டப் பேரவையில் பேசுவதற்கு உரிமையே இல்லை என்பது போல் திமுகவினரும், திமுக அமைச்சர்களும், பேரவைத் தலைவரும் நடந்து கொள்கின்றனர். நாங்களும் தேர்தலை சந்தித்து, வெற்றி பெற்று, மக்கள் பிரதிநிதிகளாகத் தான் இந்த அவையில் அமர்ந்து இருக்கிறோம். நான் இந்த அவையின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர். எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.

என்னை கொச்சைப்படுத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், 2006ம் ஆண்டு முதல் நான் சட்டமன்றத்தில் உரையாற்றும்போதெல்லாம், திமுக அமைச்சர்களும், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து எனக்கு இடையூறு கொடுத்து வருகின்றனர்.

தலைவன் இருக்கிறான் மயங்காதே:

எம்.ஜி.ஆர். பாடலான "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்று கூறி என்னுடைய உரையை முடித்தேன்.

கருணாநிதியோ,“எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய உரையின் இறுதியிலே எம்.ஜி.ஆர். பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காக பாடியதல்ல. என்னை மனதிலே கொண்டு எம்.ஜி.ஆர். பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் அல்லவா" என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசுகையில், “இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டும் என்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ... ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். ஒரு தலைவி இருக்கிறார், மயங்காதே என்று சொல்லவில்லை" என்றும் கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் சொன்னது அண்ணாவை...:

எம்ஜிஆரின் மேற்படி பாடல் பணத் தோட்டம் திரைப்படத்தில் வருகிறது. இந்தப் படம் வெளியான வருடம் 1963. அப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்று எம்ஜிஆர் கூறியது அண்ணாவை நினைத்துத் தானே தவிர, கருணாநிதியை நினைத்து அல்ல. அந்த சமயத்தில் நான் அரசியலிலேயே இல்லை. அப்போது எனக்கு வயது 15. மாணவியாக பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் போது 'தலைவி இருக்கிறார்" என்று என்னை எப்படி கூற முடியும்?.

மக்கள் நலன் குறித்து நான் சொல்ல வேண்டிய கருத்துகள் சட்டமன்றப் பேரவை விவாதத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும் என்பதாலும், என்னுடைய விவாதத்தை ஆளும் கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் திசை திருப்பிவிடுவார்கள் என்பதாலும் தான், நான் மேற்படி கருத்துகளை சட்டப் பேரவையில் தெரிவிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உண்மை நிலையை மக்களுக்கு விளக்குவது என் கடமை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+