வளர்ச்சி நிதியில் இலவச டிவியா?-அரசுக்கு தணிக்கை துறை 'குட்டு'

Subscribe to Oneindia Tamil

TV
சென்னை: தமிழகத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு இந்திய தணிக்கைத் துறை சிபாரிசு செய்துள்ளது.


இந்திய தணிக்கை துறை 2007-08ம் ஆண்டில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்தது.

இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி ஷங்கர் நாராயன் சென்னையில் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது:

நகர்புற ஏழை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ஒரு கோடி அளவுக்கு நகர பஞ்சாயத்து நிர்வாகங்கள் பயன்படுத்தத் தவறியுள்ளன.

2007-09ம் ஆண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டபடி, குடிசைப் பகுதியில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தருவதிலும் குறைபாடு காணப்படுகிறது.

சென்னை மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் அகற்றுதல் மற்றும் பதப்படுத்தல் அமைப்பை 2003ம் ஆண்டிலேயே ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் அப்பணி நடைபெறாமல் உள்ளது.

மாநில அரசின் நகர்ப்புற சுகாதார சேவைகள் கொள்கைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு சுகாதார மையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சி இதை அமல்படுத்த தவறியுள்ளது.

பஞ்சாயத்து யூனியன்களுக்கு வழங்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஆராய தனி குழு அமைக்கப்பட வேண்டும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய ரூ.120.98 கோடி, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.

சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் மாதிரிகளை சோதனை செய்ய முடிவதில்லை. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+