பெட்ரோல் விலை உயர்கிறது: மக்களே.., தொடர்ந்து ஏமாறுஙகள்!

பொருளாதாரம், பணவீக்கம், வங்கி வட்டி இதையெல்லாம் விட, உடனடியாக விலைவாசியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுதான்.
அதை மீண்டும் கையிலெடுக்கிறது மத்திய அரசு. இன்றோ அல்லது இன்னும் சில தினங்களிலோ பெட்ரோல், டீஸல் போன்றவற்றின் விலையை உயர்த்தப் போகிறது மத்திய அரசு.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை பீப்பாய்க்கு 82 டாலராக சமீபத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக புலம்ப ஆரம்பித்துள்ளன. இதற்காகத்தான் இந்த விலை உயர்வு.
தற்போது பெட்ரோலை லிட்டருக்கு ரூ.3.06 நஷ்டத்திலும், டீசலை லிட்டருக்கு ரூ.1.56 நஷ்டத்திலும், மண்ணெண்ணையை லிட்டருக்கு ரூ.17.23 நஷ்டத்திலும், சமையல் கேஸை சிலிண்டருக்கு ரூ.299.01 தள்ளுபடியிலும் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. இதனால் நடப்பு நிதியாண்டில் அவற்றுக்கு ரூ.44 ஆயிரத்து 300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் தருகிறார்கள்.
இழப்பைச் சரிக்கட்ட, பெட்ரோலுக்கு விலை நிர்ணயிப்பதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி பொதுத்துறை எண்னெய் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கும், டீசல் மீதான மானியத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் யோசனை தெரிவித்துள்ளது (இந்த ஆலோசனை கூடத் தேவையில்லை... நினைத்த நேரத்தில் உயர்த்திக் கொள்ளலாம் பாருங்கள்!).
தனியார் எண்ணெய் நிறுவனங்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளன. மக்களை வதைத்தேனும் லாபம் பார்ப்பது என்று முடிவான பிறகு, தனியார் என்ன, பொதுத்துறை என்ன... எல்லாம் ஒரே குட்டையின் மட்டைகள்தான்.
இதுபற்றி பிரதமரும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகமும் இன்று ஆலோசனை நடத்துகிறார்களாம். இந்த ஆலோசனையின் முடிவில், இன்று நள்ளிரவிலிருந்தே கூட விலை உயர்த்தப்படலாம்.
நியாயமா?:
ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலையை உயர்த்துவதில் மத்திய அரசு காட்டும் வேகம் அபாரமானது. ஆனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 17 டாலராகக் குறைந்திருந்த போது, விலைக் குறைப்பைப் பற்றி வாய்திறக்கவில்லை யாரும். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு 30 டாலருக்குள்தான் இருந்தது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்.
அன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இப்படிச் சொன்னார்: "பெட்ரோலிய நிறுவனங்கள் நிறைய நஷ்டத்தைச் சந்தித்துவிட்டன கடந்த காலங்களில். இப்போதுதான் லாபம் சம்பாதிக்கின்றன. இது தொடர்வதை அனுமதிக்க வேண்டும்" என்றார்.
பின்னர் பொது நல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் இடித்துரைத்த பிறகுதான் ஒப்புக்கு ரூ. 10 இரண்டு மூன்று தவணைகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால் சில தினங்கள்தான் அதுவும்.
கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு மேல் போகத் துவங்கியதுமே, விலை உயர்வைப் பற்றி பேச ஆரம்பித்தவர்கள், திடுதிப்பென்று லிட்டருக்கு ரூ. 5யைஐ உயர்த்தினார்கள்.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 140 டாலருக்கு மேல் விற்கப்பட்டபோது என்ன விலை கொடுத்தோமோ அதைத்தான், பீப்பாய் 76 டாலராக விற்கப்பட்ட போதும் இந்திய பிரஜைகள் கொடுத்து வருகிறார்கள். அப்படியெனில் இப்போது விலை உயர்வுக்கான அவசியம் என்ன வந்தது?.
கச்சா விலை குறையும்போது கொஞ்ச நாளைக்கு லாபம் சம்பாதிக்கட்டும் என்று நினைப்பவர்கள், அதே கச்சா விலை சற்று உயரும் போது, மக்களுக்காகவும் இருக்கிற மோசமான விலை நிலையை இன்னும் மோசமாக்காமல் தவிர்க்கவும் கொஞ்சநாள் பொறுமை காக்கலாமே...
மக்கள் நல அரசு என்று சொல்லிக் கொண்டு இலவசங்களில் பெரும் பணத்தை (திமுக அரசு பெட்ரோலுக்கு விதிக்கும் உள்ளூர் வரிகளைக் குறைத்தாலும் தமிழகத்தில் விலை குறையுமே) செலவிடும் மத்திய மாநில அரசுகள், அதில் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, பெட்ரோல்-டீசல் விலையைத் தரப்படுத்தி (standardise) விலை நிலையைக் கட்டுக்குள் வைக்க உதவலாமே!.












Click it and Unblock the Notifications