எஸ்.ஐ. கொலையில் மனைவி பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனைக் கொல்ல முயன்றது ஏன் என்பது குறித்து கைதான அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த 7ம் தேதி ஆள்மாறாட்டம் காரணமாக வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டது கடையம் எஸ்ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், சிவகாமியின் சகோதரர் கந்தசாமி, கள்ளபிரான், ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

மதுரை நீதிமன்றத்தில் சிவகாமியின் சகோதரர் சுப்பிரமணியன் என்பவர் சரணடைந்தார். சிவகாமி, ஐயப்பன் ஆகிய இருவரும் நேற்று போலீசில் சிக்கினர்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் கண்ணன் என்பவர் சரணடைந்தார். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

எஸ்ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்..

எனக்கும், கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

எனது பெற்றோர் 100 பவுன் நகையும், ரூ.5 லட்ச பணமும் வரதட்சணையாக கொடுத்து திருமணம் நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவருடைய சுயரூபம் தெரியவந்தது. எனக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும்.

சின்ன விஷயத்தைக் கூட காரணம் காட்டி சண்டை போடுவார். அப்போது அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

திருமணத்துக்கு முன்பே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாமே என்று அவரிடம் பலமுறை கேட்டேன். அப்போது அவர், எனது அண்ணன்களிடம் சென்று இன்னும் வரதட்சணையாக பெருந்தொகை வாங்கி வந்தால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்.

இதனால் எங்களுக்குள் நிம்மதியான வாழ்க்கை ஏற்படவில்லை. கணவன்-மனைவி தகராறு காரணமாக அடிக்கடி எனது பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானேன். இதைப் பார்த்த எனது குடும்பத்தினர் கண்ணீர் வடித்தார்கள். அப்படி இருந்தும் வாழ்ந்தால் சிவசுப்பிரமணியன் உடன்தான் வாழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இதனால், எனக்காக என்னுடைய சகோதரர்கள் சிவசுப்பிரமணியன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானத்துக்கு கொண்டுவர பல முறை முயற்சி செய்தார்கள். ஆனால், இதற்கு எல்லாம் சிவசுப்பிரமணியன் மசிந்ததுபோல் தெரியவில்லை. பிடிவாதமாக என்னை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். எனது வாழ்க்கை திருமணமான கொஞ்ச நாளிலேயே நரகமாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.

இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக எங்களுக்குள் விவகாரத்து வழக்கு கோர்ட்டில் தொடரப்பட்டது. இதனால் எனக்கு சிவசுப்பிரமணியன் மீது ஆத்திரம் அதிகமானது. அவர் எனக்கு கிடைக்கவில்லை; அதேபோல் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று எனது சகோதரர்களிடம் கூறினேன்.

கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே சிவசுப்பிரமணியத்தை அவர்கள் கொலை செய்ய திட்டம் வகுத்தனர். ஆனால், அந்த வலையில் சிவசுப்பிரமணியனுக்கு பதில் ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சிக்குவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

ரகசிய விடுப்பில் போனதால் தப்பினேன்-சிவசுப்பிரமணியன்:

இந் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், எனக்கும் சிவகாமிக்கும் திருமணம் முடிந்த 3வது நாளிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது.

மனைவி பட்டப்படிப்பு படித்திருப்பதாக சொன்னார்கள். அவரிடம் கேட்டபோது பிளஸ்-2 பெயில் என்றார். சான்றிதழை வாங்கிப்பார்த்த போது 4 வயதை குறைத்துச் சொல்லி என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அன்று முதல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மனைவி மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களின் அறைகளில் தங்கினேன். என்னை கேட்காமலேயே கர்ப்பத்தை கலைத்தாள். இதனால் நான் கடும் வெறுப்படைந்தேன்.

அதன்பிறகு என்னைவிட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். அவளது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தின் திட்டப்படி என்மீது வரதட்சணை புகார் கொடுத்தாள். துப்பாகியை காட்டி நான் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக புகார் செய்யவே, நான் சஸ்பெண்ட் ஆனேன்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்தேன். இநி நிலையில் என்னைக் கொலை செய்ய சதி போட்டனர்.

2 முறை என்னை கொல்ல சதி நடந்தது. இரண்டு முறையும் தப்பிவிட்டேன். இப்போது 3வது முறையாக தப்பியிருக்கிறேன். சம்பவத்தன்று நான் ரகசியமாக விடுமுறை எடுத்து கோவிலுக்கு சென்றதால் உயிர் பிழைத்தேன் என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட சிவகாமி, ஐயப்பன் இருவரையும் விசாரணைக்கு பின் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு நீதிபதி விடுப்பில் சென்றிருப்பதால் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். இருவரும் முகத்தை மூடியவாறு வந்தனர்.

2 பேரையும் நீதிபதி ராமானுஜம் வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் பாளை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்

பின்னர் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை தொடர்பாக கைதானவர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பு நேற்று நடந்தது. நெல்லை 3-வது மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடந்தது.

மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. (பொறுப்பு) கோவிந்தராஜ், பாளை. மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவுடை நம்பி, ஜெயிலர் அமிர்தலால் மற்றும் போலீசார் ஆகியோர் மேற்பார்வையில் இந்த அடையாள அணிவகுப்பு நடந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மற்ற கைதிகளுடன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். கொலையை நேரில் பார்த்த மதுரை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மணி, போலீசார் பாலமுருகன், துரைமுருகன், டிரைவர் செந்தில் ஆகியோர் கைதானவர்களை அடையாளம் காட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+