'தை பிறந்தால் வழி பிறக்கும்'-தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழ்ச் சமுதாய மக்கள் வாழ்வில் வளமும், நலமும் செழிக்கட்டும். மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிப் பெருகட்டும் என முதல்வர் கருணாநிதி மக்களுக்கு பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகம் முழுவதும் சீரான மழை, செழிப்பான விளைச்சல் என உழவர் பெருமக்கள் உளம் குளிர வேளாண்மையின் வளம் பெருகியுள்ள வேளையில்,

இவ்வாண்டின் பொங்கல் விழாவையும், தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடும் எனதருமைத் தமிழ்ச்சமுதாய மக்கள் வாழ்வில் வளமும், நலமும் செழிக்கட்டும். மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிப் பெருகட்டும் என உளமார வாழ்த்துகிறேன்.

இந்தியப் பண்பாட்டில் 75 விழுக்காடு, திராவிடப் பண்பாடு என சுநீதிகுமார் சட்டர்ஜி என்னும் ஆய்வியல் அறிஞர் குறிப்பிடுகிறார்.

அத்தகைய பெருமை வாய்ந்த திராவிடப் பண்பாட்டின் இன்றைய வடிவமாக விளங்கும் தமிழ்ச் சமுதாயம் தழைத்திட எந்த வகையிலெல்லாம் உதவிட முடியும், நன்மைகளை நிறைவேற்றிட முடியும், சலுகைகளை வழங்கிட முடியும் என ஒவ்வொரு நொடி நேரத்தையும் எண்ணி எண்ணிச் செலவிட்டு, உழைத்து வருகிறது இந்த அரசு.

தமிழகத்தில் வாழும் ஏழை எளியோர் நலம்பெற வேண்டும் எனும் விழைவோடு, தமிழகம் இந்தியாவில் அனைத்து வகையிலும் முன்னோடி மாநிலமாகப் புகழ் குவிக்க வேண்டும் என்னும் உணர்வோடு திட்டங்களை நிறைவேற்றிவரும் தமிழக அரசின் சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

தை பிறந்தால் வழி பிறக்கும்-ஜெயலலிதா:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையி்ல்,

தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய, இயற்கையை நேசிக்கும் விழாவாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை, எளியவர் என்ற பேதமோ, சாதி, மத வித்தியாசமோ இல்லாமல் நன்றியுணர்வு என்ற இலக்கோடு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்! உழைக்கும் மக்கள் தமக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள்! உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாள் பொங்கல் திருநாள்!

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உழைக்கும் மக்கள் பயிர்க் கடன் இல்லாமை, உரத் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக விவசாயிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, விவசாயிகளுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குடிகார மாநிலமாக மாறும் தமிழகம்-ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் புத்தாண்டு பிறக்கும் இந்த நன்னாளில், தமிழர்களின் இல்லந்தோறும் பொங்கலோடு இன்பமும் பொங்கிட வாழ்த்துகிறேன்.

நாடு வாழ நாம் வாழுதல் வேண்டும் என்ற எண்ணம் அனைவரது உள்ளத்திலும் பொங்கிட வேண்டும்.

தமிழகம் இன்று மிதமிஞ்சி குடிப்பழக்கத்தால் பெரும் குடிகார மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது. சமரசத்திற்கு இடமில்லாத மதுவிலக்கின் மீதான நமது நம்பிக்கையை பிரகடனப்படுத்த வேண்டும். இதற்கு இந்த நன்னாளில் அனைவரும் சூளுரை எடுத்துக் கொள்வோம்.

எம் தமிழர் எழுந்துவிட்டார், எங்கும் தமிழ் முழக்கம், இனி ஏற்றம் தமிழுக்கு என்ற நிலையினை உருவாக்கிட சூளுரைத்து பாடுபடுவோம்.

நெஞ்சில் வடிந்த கண்ணீர்-வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில்,

தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் கொண்டாடி வரும் இனிய விழாதான் தைப்பொங்கல் விழா. இது இயற்கைக்கு நன்றியும் உழைப்புக்கு உயர்வும் தந்து உலக மக்களை வாழ வைக்கும் உழுதொழில் வேளாண்மைக்கு மகுடம் சூட்டும் விழா.

கரும்பும் சர்க்கரைப் பொங்கலும் தமிழர் திருநாளில் நாவுக்குச் சுவை தரும் என்றாலும் நம் இதயத்தில் இனிப்பு இல்லை, உப்பு கரிக்கிறது நெஞ்சில் வடிந்த கண்ணீரால்.

இலங்கைத் தீவில் நம் தமிழ் இனம் கொலைக்களத்தில் வதைபட்டது. அவர்களின் வேதனை நீங்கி உரிமை வாழ்வு பூக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும் உறுதி கொண்டு பணியாற்றி இப்பொங்கல் திருநாளில் சூளுரைப்போம்.

தமிழகத்தில் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிகளின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. இந்த அறைகூவல்களை எதிர்கொண்டு தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், விவசாயிகளின் அல்லல்களைப் போக்க உரிய கடமை ஆற்றவும் இந்த தைப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம் என்று கூறியுள்ளார்.

திருவிழாவாக கொண்டாடுவோம்-ஸ்டாலின்:

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,
புத்தாண்டு என்பது ஒரு வருடத்தின் பிறப்பாக மட்டுமே உலகமெங்கும் கணக்கிடப்படுகிறது. தமிழர்களின் புத்தாண்டோ ஒரு புதிய வரலாற்றின் பிறப்பாக, புதைக்கப்பட்ட வரலாற்றின் மீட்டெடுப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் முதல்வர் கருணாநிதி.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை தமிழகத்தின் எழுச்சி திருநாளாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு. வேற்று கலாசாரங்களின் வடிவமாக பல பண்டிகைகள் இந்த மண்ணில் கொண்டாட்பட்டு வந்த நிலையில், தமிழ் நிலத்தின் அடையாளமாகவும், சாதி-மத வேறுபாடுகளை கடந்த தமிழ் உணர்வு திருநாளாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடச் செய்தது, திமுக.

இந்தப் பண்பாட்டு மீட்டெடுப்பின் வாயிலாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை புத்துணர்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த புத்துணர்ச்சிக்கு பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் முனைப்போடு முன்னெடுத்த முயற்சிகளே காரணம் என்று கூறியுள்ளார்.

ஜனநாயகம் மீட்போம்-தா.பாண்டியன்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள், பன்னெடுங்காலமாகக் கொண்டாடி வரும் அறுவடைத் திருநாள் இது.

பல விழாக்களைக் கொண்டாடினாலும், பகுத்தறிவுக்கொத்த சாத்திரச் சடங்குள் இல்லாத, உழைப்பையும், உழைப்பிற்கு ஒத்துழைத்த கால் கடைகளையும் போற்றும் விழாவாகும் பொங்கல் திருநாள். இது சாதிமத வேறுபாடுகளைக் கடந்து, உண்டி விளைவித்து உயிர்காக்கும் உயர் மனிதர்களான உழவர்களை வாழ்த்தும் நாளும் ஆகும்.

2010ல் கொண்டாடும் தமிழர் திருநாளின் போது, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாதுகாக்கவும், நீதியையும், ஜனநாயக நெறிகளையும் மீட்டுக் காத்திடவும், இந்த நாளின்போதும் சித்திரவதைக் கூடங்களில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் மனித உமைகளை மீட்டிடவும் உறுதி ஏற்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு:

இந் நிலையில் தா.பாண்டியன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசினார். பென்னாகரன் இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+