தமிழகத்தின் மொத்த கடன் ரூ.74,858 கோடி-கருணாநிதி
சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89ல் இருந்து 4.55 சதவீதமாக குறைந்ததற்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 11.89 ஆக இருந்தது. ஆனால் தற்போது 4.55 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது ஏன் என சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித அறிக்கையில், 'உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நமது நாட்டில் தொழில் துறையிலும், ஏற்றுமதி துறையிலும் மந்தநிலை காணப்படுகிறது.
இதனால் தொழில்துறையில் முன்னணி மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை குறைந்த அளவிலேயே வளர்ச்சி வீதத்தை அடைந்திருக்கின்றன.
2008-09ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கின்றன.
தொழில்துறையில் முன்னணியில் உள்ள குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்த புள்ளி விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்ததற்கு முக்கிய காரணம் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கமே ஆகும்.
கிராமப்புறங்களில் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நிதி எங்கிருந்து பெறப்படும் என்று ஜெயலலிதா கேட்டிருந்தார்.
மாநில அரசின் ஆண்டு திட்டத்துக்கான நிதி ஆதாரங்களிலிருந்து இந்த செலவுகள் மேற்கொள்ளப்படும். 21 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.12 ஆயிரத்து 600 கோடி தேவைப்படும். 6 ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், ஒவ்வோர் ஆண்டும் ரூ.2 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும்.
வரும் நிதியாண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். ஒரு வீடு கட்ட ரூ.60 ஆயிரம் என்ற மதிப்பீட்டில் ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்' எனக் கூறியுள்ளார்.
மொத்த கடன் ரூ.74 ஆயிரத்து 858 கோடி:
கடந்த திங்கள் கிழமை சட்டசபையில் பேசிய ஜெயலலிதா, 'தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.83 ஆயிரம் கோடி என்றும், ஆண்டு வட்டியாக ரூ. 6,000 கோடி செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அரசு 10 மாதங்களுக்கு முன் கூறியது.
தற்போது கடன் தொகை 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக தகவல் வருகிறது. இவ்வளவு கடன் வாங்கிய நிதியை, சரியான வழியில் செலவு செய்யப்படாதது தான், பொருளாதார சீர்குலைவுக்கு காரணம்.
ஒன்றுக்கும் பயனில்லாத இலவச கலர் 'டிவி' போன்ற பொருட்கள் வழங்குவதற்குத் தான், கடனாக பெற்ற நிதி செலவழிக்கப்படுகிறது. கடனாக பெறும் தொகையை, அதிக வருவாய் தரக்கூடிய திட்டங்களில் செலவு செய்யப்படவில்லை.
கடனாக பெற்ற நிதியில் இருந்து, தொழிற்சாலை இல்லாத பகுதிகளில் புதிதாக தொழிற்சாலை ஆரம்பித்திருந்தால், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற்று அவர்களே கேஸ் ஸ்டவ், இலவச டிவி வாங்கிக் கொள்வார்கள்' என கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.74 ஆயிரத்து 858 கோடி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications