தமிழகத்தில் கூலிப் படைகள் ராஜ்ஜியம்-வைகோ
புளியங்குடி: தமிழ்நாட்டில் சட்டம் ஓழுங்கு கெட்டு விட்டதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த 7ம் தேதி ஆம்பூர் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட அவரது வீட்டிற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று மாலை சென்றார்.
அவரது குடும்பத்தாரிடம் இரங்கலையும், ஆறுதலையும் கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை. இதனால், மக்கள் பாதுகாப்புடன் வாழமுடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சீருடையோடு வரும்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். நடுரோட்டில் இச்சம்பவம் நடப்பதை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதையே காட்டுகிறது.
வெற்றிவேல் வெட்டப்பட்டு கிடந்த போது, 'கோல்டன் ஹவர்' எனப்படும் பொன்னான மணித் துளிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. அப்போது ஆம்புலன்சுக்காக காத்திராமல், அமைச்சர்கள் வந்த வாகனத்தில் கொண்டு சென்றிருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம்.
அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்சை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மனிதபிமானத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் இதுபோன்று 13 கொலைகள் நடந்துள்ளது. மேலும் கூலிப்படைகள் ராஜ்ஜியம் அதிகரித்துள்ளது. பணம், அதிகார பலம் இருந்தால் யாரும், யாரையும் கொலை செய்யலாம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடும் நிலை உள்ளது.
சாட்சிகள் சரியாக இருந்தால்தான் தண்டனை அதிகரிக்கும். ஆனால் சாட்சிகள் சரியில்லாததால் தா. கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் நாளிதழ் பணியாளர் 3 பேர் கொல்லப்பட்ட வழக்குகள் வெற்றி பெறாமலேயே போய் விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications