விலைவாசி..இது காஸ்ட்லி பொங்கல்!
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக பயன்படுத்தப்படும் முந்திரி, ஐவ்வரிசி உள்ளிட்ட முக்கிய மளிகைப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதால் மக்கள் எரிச்சலில் உள்ளனர்.
சீனா சுக்கு கடந்த ஆண்டு கிலோ ரூ.90க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.130க்கு விற்கப்படுகிறது. நாட்டு சுக்கு கிலோ ரூ.180க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டில் முந்திரி முதல் ரகம் கிலோ ரூ.300க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.380 ஆகிவிட்டது. 2ம் ரகம் ரூ.250ல் இருந்து ரூ.320ஆக உயர்ந்துள்ளது.
இந்தாண்டு ஜவ்வரிசி கிலோ ரூ.55க்கும், சேமியா கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. அதேபோல் உலர் திராட்சை முதல் ரகம் கிலோ ரூ.120க்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இப்போது ரூ.150க்கு விற்பனையாகிறது.
அச்சுவெல்லம் கிலோ ரூ.40ல் இருந்து ரூ.50ஆக உயர்ந்துள்ளது. உருண்டை வெல்லம் ரூ.40க்கும். வேலூர் வெல்லம் ரூ.45க்கு விற்பனையாகிறது. பிரத்தியேக விலை உயர்வாக சர்க்கரை கிலோ ரூ.44க்கு விற்கப்படுகிறது.
பாசிப் பருப்பு கிலோ ரூ.80க்கும், பச்சரிசி புதுசு ரூ.28க்கும், பழைய அரிசி ரூ.36க்கும் விற்பனையாகின்றன. பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் விற்பனையும் மிக மந்தமாக இருப்பதாக மளிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஜனவரியில் முதல்வர்கள் மாநாடு
இந் நிலையில் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று மத்திய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
நாட்டில் விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சரான பவார் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரி வருகின்றன.
இந் நிலையில் விலைவாசி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து பவார் கூறுகையில், நாட்டில் பதுக்கல் பேர்வளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனையும் அனைத்து முதல்வர்கள் கூட்டத்தில் நடைபெறும்.
மேலும் 20 லட்சம் டன் அரிசி, 50 லட்சம் டன் கோதுமை ஆகியவற்றுடன் பருப்பு வகைகளின் இறக்குமதியை அதிகரிக்கவும் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பெட்ரோல் விலை குறித்தும் ஆலோசனை:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82 டாலராக அதிகரித்துள்ளதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு்ள்ள ரூ.44,300 கோடி இழப்பை சரிகட்ட விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பர் என்று தெரிகிறது. இருப்பினும் சமையல் கேஸ், மண்ணெண்ணெயை மட்டும் தவிர்த்துவிட்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications