பென்னாகரத்தில் 'வன்னிய அதிகாரிகள்' டிரான்ஸ்பர்-ராமதாஸ்

இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பென்னாகரம் இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என யாருக்கும் தெரியாது. அதற்குள், தொகுதியில் தார் சாலைகள் போடுவது, இலவசங்களை அள்ளிக் கொடுப்பது போன்றவை தாராளமாக நடக்கின்றன.
இன்னொருபுறம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கும் அரசு அலுவலர்கள், ஆசியர்கள் இடையே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இனம் கண்டறியப்பட்டு மாறுதல் என்ற பெயரில் வெளியிடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பந்தாடப்பட்டு வருகிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர் ஒருவர் இங்கேயே முகாமிட்டு ஆளுங்கட்சியினர் யார் யாரை மாற்ற வேண்டும் என்று குறித்துக் கொடுக்கிறார்களோ, அவர்களை எல்லாம் வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
ஆசிரியர்களைப் போல அரசு ஊழியர்களிலும் வன்னியர்கள் மற்றும் பா.ம.க அனுதாபிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
தற்போது அங்கே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இல்லை என்பதால், தேர்தல் ஆணையமும் இதை கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் ஆணையம் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகி துன்புறுகின்ற ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் பாதுகாக்க பா.ம.க மாநிலம் தழுவிய பெரும் போராட்டம் நடத்தும்' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications