பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
முதலாவதாக அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு படு விறுவிறுப்பாக நடந்தது.
அவனியாபுரத்தில், ஆண்டுதோறும் தை முதல் நாளன்று, பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்றும் ஜல்லிக்கட்டு நடந்தது. அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டிருந்தது. மேலும் காளைகளுக்கும் டோக்கன் தரப்பட்டு காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கிட்டத்தட்ட 150 வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். இவர்களில் மது அருந்தியிருந்த 3 பேரும், முதியவர் ஒருவரும் நீக்கப்பட்டனர். மற்ற 146 பேரும் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதேபோல, பல மாவட்டங்களிலிருந்து போட்டிக்காக வந்திருந்த 346 காளைகளில், குறைந்த வயது, காய்ச்சல், உடல் முழுவதும் எண்ணெய் தேய்க்கப்பட்ட மற்றும் பலவீனமானது என்று கண்டறியப்பட்ட காளைகள் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல கொம்புகளை கூர்மையாக சீவி வைத்திருந்த 34 காளைகளின் கொம்புகளும் கூர் மழுங்க செய்யப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
காலை பத்தரை மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் ஊர் நாட்டாமை சார்பில் விடப்பட்ட ஐந்து மாடுகளை அப்படியே விட்டு விட்டனர், யாரும் பிடிக்கவில்லை.
பின்னர் வந்த காளைகளைப் பிடிக்க வீரர்கள் போட்டி போட்டு தீரத்துடன் பொருதினர். மாடு பிடிப்பதில் ஒரு போலீஸ்காரரும் களத்தில் குதித்தார். அவரது பெயர் சதீஷ். இவர் உள்பட 36 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கேயே சிகிச்சை தரப்பட்டது.
வெற்றிகரமாக மாடுகளை அடக்கிப் பிடித்த வீரர்களுக்குப் பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் தரப்பட்டன.
விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் உள்ளிட்டோர் போட்டியைப் பார்த்தனர்.
இன்று பாலமேட்டில்...
இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இங்கு அரசு மற்றும் உச்சநீதிமன்றம் விதித்த வழிமுறைகளின் அடிப்படையில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பார்வையாளர்களையும், வீரர்களையும் தனியாக பிரிக்கும் வகையில் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களுக்கும், காளைளுக்கும் டோக்கன் தரப்பட்டன. மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
284 காளை மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வீரர்கள் துணிச்சலுடன் காளைகளை எதிர்கொண்டு அடக்கி பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.
காளைகளை அடக்கும் முயற்சியின்போது 24 பேர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார்.
பிற்பகலில் திடீரென போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர். பின்னர் சமரசமாகி போட்டி தொடர்ந்து நடந்தது.
போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு திமுக சார்பில் பனியன் வழங்கப்பட்டிருந்தது. அதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் படம் இடம் பெற்றிருந்தது.
நாளை அலங்காநல்லூரில்...
நாளை உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கும் பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாட்டு வண்டிப் பந்தயம்
இதற்கிடையே நேற்று மேலூர் அருகே மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.
சுண்ணாம்பூர் என்ற இடத்தில் இந்தப் போட்டி நடந்தது. தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கொடி அசைத்து பந்தயத்தை துவக்கி வைத்தார்.
மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களை சேர்ந்த பந்தய மாடுகள் போட்டியில் கலந்து கொண்டது.
பெரிய மாடு பிரிவில் 13 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பாண்டிகோயில் பாண்டிசாமி முதல் இடத்தையும், தேனி சுரேஷ் இரண்டாம் இடத்தையும், கொட்டாங்குளம் மலைச்சாமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
சிறிய மாடுகள் பிரிவில் 17 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
கட்டையம்பட்டி அருகில் குண்டும் குழியுமான ரோட்டில் எட்டிமங்கலத்தை சேர்ந்த ஒரு ஜோடி மாடு தலை குப்புற கவிழ்ந்தது. இதில் மாடுகள் படுகாயம் அடைந்தன.












Click it and Unblock the Notifications