காங்.கின் ஜாதிப் பட்டியல்-டைட்லர் மீது வழக்கு
பாட்னா: ஜாதிப் பெயருடன், கட்சி நிர்வாகிகள் பட்டியலை தயாரித்த காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக இதுபோல ஜாதி துவேஷமாக பட்டியலை தயாரித்ததாக கூறி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஜெகதீஷ் டைட்லர், அனில் சர்மா ஆகியோர் மீது தலித் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பீகார் மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மேலிட பார்வையாளரான ஜெகதீஷ் டைட்லர், மாநில தலைவர் அனில் சர்மா ஆகியோர் இந்த பட்டியலை தயாரித்து இருந்தனர்.
இந்தப் பட்டியலை சிலர் சமீபத்தில் ரகசியமாக வெளியிட்டு விட்டனர். இந்தப் பட்டியலில் கட்சி நிர்வாகிகளின் பெயர்கள், அவர்களுடைய ஜாதியுடன் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜாதி அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு நடந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பட்டியலில்,
நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் பெயரும் ஜாதியுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தலித் மக்களிடையே கடும் அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலித் கிராந்தி மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவரான விதான் சந்திரா ரானா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார் டைட்லர் மற்றும் சர்மா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து டைட்லர் கூறுகையில், கட்சிக்குள் நடந்த கடித போக்குவரத்தை யாரோ திருடி வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த நபரை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.
பல்வேறு முக்கிய தகவல்கள் அந்த கடிதத்தில் இடம் பெற்று இருந்தது. ஆனால் அதை விட்டு விட்டு சாதி பெயரை குறிப்பிட்டதை மட்டும் பெரிது படுத்தியிருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications