சூரியகிரகணம் எதிரொலி-வெறிச்சோடிய ஹரித்வார்

கிட்டத்தட்ட 6 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும், மஹா கும்ப மேளா, 13ம் தேதி அதிகாலையில் தொடங்கியது. அன்று அதிகாலையில், கங்கை நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்.
ஹரித்வார், டேராடூன், பெளரிதேரி ஆகிய பகுதிகள் கும்ப் நகராக வர்ணிக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் கங்கையில் புனித நீராடும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
கிட்டத்தட்ட 3 மாதகாலத்திற்கு இந்த கும்ப மேளா நடைபெறும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மஹா கும்பமேளா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று கங்கண சூரியகிரகணம் நடந்ததையொட்டி பக்தர்கள் நடமாட்டம் அடியோடு நின்று போயிருந்தது. ஹரித்வார் உள்ளிட்ட இடங்களில் இருந்த கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பக்தர்கள் தியானங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருந்தனர்.
கும்பமேளாவின்போது எங்கும் ஒலிக்கும் வேத பாராயணங்கள், மணியோசைகள் என எதுவுமே இன்று கேட்கவில்லை. மொத்தத்தில் ஹரித்வார் இன்று பெரும் நிசப்தத்துடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications