பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்-லத்திகா சரண்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக லத்திகா சரண் பொறுப்பேற்றுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் டிபிஜி பதவியில் இது நாள் வரை இருந்து வந்த கே.பி.ஜெயின் பொறுப்புகளை ஒப்படைத்து விடை பெற்றார்.
பின்னர் டிஜிபி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் லத்திகா சரண். அவருக்கு உயர் அதிகாரிகள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்பதால் பதவியேற்பின்போது கண் கலங்கிக் காணப்பட்டார் லத்திகா. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவின் 2வது பெண் டி.ஜி.பி., தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இதற்காக அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் டி.ஜி.பி. பதவி என்பது பாரம்பரியமிக்க, பெருமைமிக்க, புகழ்மிக்க பதவியாகும். இந்த பதவியில் உட்காருவதற்கு ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் கனவு காண்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
தகுதியும், திறமையும் இருந்தால் நிச்சயமாக இந்த பதவியில் உட்காருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். முதல் பெண் டி.ஜி.பி. என்பதைவிட, முதலில் நான் ஒரு போலீஸ் அதிகாரி. அதற்குபிறகுதான் டி.ஜி.பி.
தற்போது நாட்டில் முக்கியமான பதவிகளில் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். எனக்கு கிடைத்த இந்த பதவியை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தமிழக காவல்துறை இந்தியாவிலேயே தலைசிறந்த காவல்துறை ஆகும்.
இங்கு திறமையான அதிகாரிகள் உள்ளனர். காவலர்களிலும் தியாக உள்ளம் படைத்த திறமையானவர்கள் உள்ளனர். என்னால் முடிந்தவரை இந்த பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றுவேன்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. குற்ற தடுப்பும், குற்ற கண்டுபிடிப்புகளும் நல்ல நிலையில் உள்ளன. விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
தொடர்ந்து இதே நிலைமை தொடர முயற்சி மேற்கொள்ளப்படும். பல சிறப்பான திட்டங்கள் என் மனதில் உள்ளது. அது படிப்படியாக நிறைவேற்றப்படும். என்னோடு பணியாற்றுவதற்கு திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்களை கலந்து ஆலோசித்து செயல்படுவேன்.
என்னை பொறுத்தமட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பெண்களும், குழந்தைகளும் பேணி காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தால்கூட அதை பெரிதாக நினைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை பிடித்து உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். அதுதான் எனது நோக்கமாகும். அடுத்தபடியாக பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கும், காவலர்களின் குறைகளை களைவதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.
நெல்லையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமான சம்பவம். சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமல்ல, யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. இது அனைவருக்கும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம்.
எதிர்காலத்தில் சீருடையில் இருக்கும் போலீசாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது எங்கள் கடமையாகும். அந்த சம்பவம் தொடர்பாக நெல்லை போலீசார் விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தற்போது அமைதியான மாநிலமாக உள்ளது. தீவிரவாதிகளால் தற்போது ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், அதற்காக சும்மா இருந்துவிட மாட்டோம். உளவுப்பிரிவு போலீசார் அண்டை மாநிலங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலும் இது தொடர்பாக நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவார்கள் என்றார் லத்திகா.
வெற்றிவேல் குடும்பத்துக்கு லத்திகா நேரில் ஆறுதல்:
முன்னதாக நேற்று நெல்லையில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. வெற்றிவேல் குடும்பத்தினரை நேரில் சந்தித்து லத்திகா சரண் ஆறுதல் கூறினார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளத்தில் வெற்றிவேல் வீட்டிற்கு சென்று மனைவி பிரேமா, குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே வெற்றிவேல் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிதியுதவியான ரூ. 7 லட்சத்தை சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன் ஆகியோர் நேரில் வழங்கினர்.
மேலும் இக் குடும்பத்திற்கு டி.ஐ.ஜி.,கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கார்க் முதல் சாதாரண போலீசார் வரை 1,500 பேர் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். இது ரூ. 12.4 லட்சமாகும்.இது தவிர கோவை மாவட்ட ஹோம் கார்ட் படையினர் 35,000 ரூபாயை வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications