காணும் பொங்கலில் விபரீதம் - கடலில் மூழ்கி 4 பேர் பலி
சென்னை: சென்னை அருகே காணும் பொங்கலான நேற்று கடலில் குளித்த நான்கு பேர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்கள்.
சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி என்பவரின் மகன் ஆதிசேஷன் (20).
நேற்று காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் சுற்றுப்புறங்கள் களை கட்டியிருந்தன. லட்சுமியும் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் பழவேற்காடு கடற்கரைப் பகுதிக்கு சென்றார்.
அப்போது ஆதிசேஷன் கடலுக்குள் சென்று குளித்துள்ளார். அப்போது திடீரென அலைகளில் சிக்கி உள்ளிழுக்கப்பட்டார். இதைப் பார்த்து அவரது உறவினர்கள் பதறி அலறினர்.
ஆனால் இன்னொரு அலை அவரை வேகமாக கரைக்குக் கொண்டு வந்து போட்டது. மூச்சுத் திணறிய நிலையில் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆதிசேஷன் உயிரிழந்தார்.
இதேபோல, மீஞ்சூர் அருகே சிந்தாமணீஸ்வரர் கோவி்லில் கூட்டம் அலை மோதியது. சாமி கும்பிட்டு விட்டு அருகில் இருந்த கடலில் மக்கள் நீராடினர்.
அப்போது ராட்சத அலை வந்து 3 இளைஞர்களை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது. 3 பேரையும் மீட்புப் படையினர் நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை.
கடல் அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டவர்கள் கும்மிடிப்பூண்டி நத்தம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (22), மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்த அருண்ராஜ் (23), நேபாளத்தை சேர்ந்த மதன்ராஜ் (22) எனத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications