மாஜி காங். எம்.பி. கார்வேந்தன் அலுவலகத்துக்குத் தீவைப்பு
தாராபுரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி கார்வேந்தனின் அலுவலகத்தில் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி தொகுதி முன்னாள் எம்.பி கார்வேந்தன். இவரது வீடு தாராபுரம் மேற்கு கச்சேரி சாலையில் உள்ளது. வீட்டையொட்டி அவரது வக்கீல் அலுவலகமும் உள்ளது.
இன்று அதிகாலை இந்த அலுவலகத்தின் ஜன்னலை திறந்த சில மர்ம ஆசாமிகள் உள்ளே இருந்த ஆவணங்களுக்குத் தீவைத்தனர்.
இதில் தீப் பிடித்துப் பரவி மேசை மீது இருந்த பல ஆவணங்கள் எரிந்து கருகிப் போய் விட்டன.
தீவிபத்து ஏற்பட்டதும் அலுவலகத்திற்கு வெளியே படுத்திருந்தவர்கள் பதறியடித்து எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். கார்வேந்தனுக்குத் தகவல் போய் அவரும் எழுந்து ஓடி வந்தார்.
கார்வேந்தனுக்கு கடந்த ஆண்டு கொலை மிரட்டல் விடுத்து 3 முறை கடிதம் வந்தது. மர்ம பார்சலும் அனுப்பப்பட்டது. அதில் பட்டாசுகளை வைத்து அனுப்பி இருந்தனர். அவரது காரும் உடைக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு கைவிடப்பட்டது.
இதையடுத்து கார்வேந்தன் வீட்டின் வாசலில் கண்காணிப்பு காமிரா பொருத்தி இருந்தார். ஆனால் இன்று அதிகாலை வந்த மர்ம ஆசாமிகள், அந்த காமிராவை வேறுபக்கம் திருப்பி வைத்துவிட்டு தீவைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கார்வேந்தனின் மகன் நிச்சயதார்த்தம் தாராபுரம் குமரன் மஹாலில் இன்று நடைபெற்றது. இதையடுத்து போலீசில் புகார் செய்துவிட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அவர் சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications