சட்டசபைக்கே வராத கருணாநிதிக்கு என்னைப் பற்றி எப்படி தெரியும்? - ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், பேரவைத்தலைவர் காளிமுத்து வந்தவுடன் எழுந்து நின்று அவருக்கு பல முறை மரியாதை செலுத்தியிருக்கிறேன். 2001 முதல் 2006 வரை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு முறை கூட கருணாநிதி சட்டப்பேரவைக்குள் வந்ததே இல்லையே? அப்படி இருக்கும் போது, நான் முன்கூட்டியே வந்தேனா, இல்லையா என்பது கருணாநிதிக்கு எப்படி தெரியும்? என்று கேட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தகவல் உரிமைச்சட்டம் தனது ஆட்சிக்காலத்திலே கொண்டு வரப்பட்டதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். 1997 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்திலே நிறைவேற்றப்பட்ட எதற்கும் உதாவத சட்டத்தை பற்றி கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அதை நிறைவேற்றாத சட்டம் தான் 1997 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம்.

இந்தச் சட்டத்தின் மூலம் தன்னார்வ நிறுவனங்கள் எந்தத் தகவலையும் பெற முடிவதில்லை என்பதும், இந்தச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு பதிலே கிடைக்காது என்பதும் தான் உண்மை. இதை நான் சொல்லவில்லை. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. பத்திரிகையிலும் செய்தியாக வெளி வந்திருக்கிறது.

எனது ஆட்சிக்காலத்தில் என்னிடத்திலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, 2005 ஆம் ஆண்டு தகவல் உரிமைச்சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு தகவல் உரிமைச் சட்ட விதிகள் இயற்றப்பட்டன.

இதனையடுத்து, எனது ஆட்சிக்காலத்தில், 12.1.2006 அன்று ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரு தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான், இந்தச் சட்டம் மக்களுக்கு பயன் உள்ளதாக அமைந்தது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது தான் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் நடை முறைப்படுத்தப்படாத ஒரு சட்டம்.

நானா மதிக்கவில்லை...?

அடுத்தபடியாக, வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத்தலைவர் மறுக்கிறார் என்று நான் எனது அறிக்கையில் தெரிவித்து இருந்தேன். அதற்கு அவையில் உள்ள பல உறுப்பினர்கள் அவை தொடங்கிய பிறகு அவைக்கு வருவதும், நடுநடுவே எழுந்து சென்று திரும்புவதும் உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி வணங்கி விட்டு அமருவார்கள். ஆனால் அதையெல்லாம் ஒவ்வொரு முறையும் பேரவைத் தலைவர் கவனித்துக்கொண்டே இருந்து ஒவ்வொருவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருக்க முடியுமா? என்று பதில் அளித்து இருக்கிறார்.

ஒவ்வொரு உறுப்பினரையும் பேரவைத்தலைவர் கவனிப்பது என்பது இயலாத காரியம். இதை நான் மறுக்கவில்லை. ஆனால், பேரவையில் எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கை முன் வரிசையிலே உள்ளது. நான் வணக்கம் தெரிவித்ததை பேரவைத் தலைவர் நன்கு கவனித்தும், பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. எனவே, இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்று தானே தவிர, கவனிக்காததன் காரணமாக அல்ல என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

நானும் பத்தாண்டு காலம் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து இருக்கிறேன். 2001 2006 ஆம் ஆண்டைய எனது ஆட்சிக்காலத்தில், தற்போதைய அவை முன்னவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது பேரவைத்தலைவராக இருந்தவர் டாக்டர் காளிமுத்து அப்போதெல்லாம், எதிர்க்கட்சித் தலைவர் வந்து வணக்கம் வைத்தால் அதற்கு பேரவைத்தலை வரும் பதில் வணக்கம் வைப்பார்.

எதிர்க்கட்சித்தலைவர் தாமதமாக வந்து வணக்கம் வைத்தாலும், பேரவைத்தலைவர் பதில் வணக்கம் வைப்பபார். இது தான் தமிழ்ப் பண்பாடு, பேரவையில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் மரபு. இதனை நானே பல முறை நேரில் பார்த்து இருக்கிறேன்.

இது குறித்த கருணாநிதியின் பதில் சப்பைக் கட்டும் விதமாகவே அமைந்துள்ளது என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

பொதுவாக, சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது, பேரவையினுள் சட்டமன்ற உறுப்பினர்கள் உணவுப் பண்டங்களை உட்கொள்வதும், கைபேசிகளை பயன்படுத்துவதும் கூடாது. அதே சமயத்தில் குடி தண்ணீர் பருகுவது மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

காலம் காலமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடைடபிடிக்கப்பட்டு வரும் மரபு இதுதான். 2006 ஆம் ஆண்டு தொடக்கம் வரை இது தான் நடைமுறையில் இருந்து வந்தது. இதே மரபு தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டுமென்றாலும், கைபேசியை உபயோகிக்க வேண்டுமென்றாலும் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு தான் செல்ல வேண்டும்.

ஆனால் 11.1.2010 அன்று நான் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, சட்டமன்ற உறுப்பினர்கள் உணவுப்பண்டங்களை பேரவைக்குள்ளேயே சாப்பிடுவதையும், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் உணவுப் பண்டங்கள் விநியோகம் செய்யப்பட்டதையும், எந்தக் கட்சியையும் சாராத ஓர் உறுப்பினர் பேரவைக்குள்ளேயே கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. இந்த அளவுக்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் மரபு, மாண்பு, கண்ணியம் ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.

காளிமுத்துவுக்கு மரியாதை செலுத்தியுள்ளேன்...

அடுத்தபடியாக, எந்தக் காலத்திலும் நான் முன் கூட்டி அவைக்கு வந்ததில்லை என்று கருணாநிதி தெரிவித்து இருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானது. எனது ஆட்சிக் காலத்தில் நான் பல முறை அவைக்கு முன்கூட்டியே சென்றிருக்கிறேன். பேரவைத்தலைவர் டாக்டர் காளிமுத்து வந்தவுடன் எழுந்து நின்று அவருக்கு பல முறை மரியாதை செலுத்தியிருக்கிறேன்.

2001 முதல் 2006 வரை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு முறை கூட கருணாநிதி சட்டப்பேரவைக்குள் வந்ததே இல்லையே? அப்படி இருக்கும் போது, நான் முன்கூட்டியே வந்தேனா, இல்லையா என்பது கருணாநிதிக்கு எப்படி தெரியும்?

எனது ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, இந்த தி.மு.க. ஆட்சியில், 8.4.2008 அன்று ஒகேனக்கல் திட்டம் கைவிடப்படுவதாக கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பிரச்சினையை எழுப்ப அவைக்கு முன்கூட்டியே வந்து விவாதத்தில் பங்கேற்றிருக்கிறேன். 8.4.2008 அன்றைய அவை நடவடிக்கைக் குறிப்புகளை பார்த்தாலே நன்கு விளங்கும்.

மேலும் கருணாநிதி தனது அறிக்கையில், சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, அந்தத் தகவலை என்னிடம் சொல்ல இயலவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

விடியறகாலையிலேயே தெரிவித்து விட்டனர்...

இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தை சுனாமி என்கிற ஆழிப் பேரலை தாக்கியிருக்கிறது என்கிற விஷயம் எனக்கு விடியற்காலையிலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது. மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உத்தர விட்டதுடன், அன்று காலையே பாதிக்கப்பட்டமக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன். பாதிக்கப்பட்டமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிவாரணப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொது மக்களையும், இறந்தோரின் உடல்களையும் நேரில் சென்று பார்வையிட்டேன். அன்றே, பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும் சென்று பாதிக்கபட்டோருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டு மல்லாமல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டேன்.

தமிழக அரசின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை உலக நாடுகள் அனைத்தும் வியந்து பாராட்டின. இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உண்மை நிலைமை இவ்வாறிருக்க, நான் காலை 10 மணிக்கு மேல் எழுந்ததாக கருணாநிதி கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

சதித் திட்டத்தின் ஒரு அங்கம் மக்கள் குரல்...

மக்கள் குரல் நாளிதழில் அதன் ஆசிரியர் டி.ஆர். ராமசாமி 1.1.1989 அன்று எழுதிய கட்டுரையை கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பிறகு, என்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டுமென்பதற்காக சில முயற்சிகள் அப்போது நடந்தன. அதில் ஒன்று தான் இந்தக் கட்டுரை. யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை தானே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆர். மறைவிற்கு பிறகு மக்களின் விருப்பப்படி, கழகத்தொண்டர்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை 22 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வகித்து வருகிறேன். இரண்டு முறை எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந் திருக்கிறது. இதற்கு என்ன பொருள்? கடந்த 22 ஆண்டு காலமாக என்னைப் பற்றி இவ்வாறு பரப்பப்பட்டு வருகின்ற அவதூறான கட்டுக்கதைகளை தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உடன் பிறப்புகளும் நம்பவில்லை என்று தான் பொருள்.

எனவே, இட்டுக்கட்டிய அவதூறான கற்பனை கதைகளை கழக உடன்பிறப்புகளும், மக்களும் இதுவரை ஏற்றுக்கொண்டதில்லை, இனியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+