தேசிய அரசியலில் சக்தி வாய்ந்த பிராந்தியக் குரலாக ஒலித்தவர் பாசு - பிரதமர்

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசுவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
பாசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய அரசியல் அரங்கில் மிகப் பிரதானமாக ஒலித்த, சக்தி வாய்ந்த பிராந்தியக் குரலாக ஜோதிபாசு விளங்கினார். பல முக்கியப் பிரச்சினைகளில் நான் ஜோதிபாசுவிடம் அறிவுரை கேட்கத் தவறியதில்லை. அவரும் பெருந்தன்மையாக தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
95 வயதாகும் ஜோதிபாசுவின் மரணத்தின் மூலம் இந்திய அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மதச்சார்பற்ற நெறிகளுக்காக கடுமையாக உழைத்தவர் ஜோதிபாசு.
60 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வின் மூலம், மேற்கு வங்கத்தில் தனது கட்சியை அதிகாரத்திற்கு இட்டுச் சென்றவர். முத்திரை பதித்தவர். தனது தலைமைத்துவத்தாலும், சீரிய பண்புகளாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும், பாராட்டுக்களையும் பெற்றவர் பாசு என்று கூறியுள்ளார் பிரதமர்.
ப.சிதம்பரம்..
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கொல்கத்தா விரைந்து சென்று ஜோதிபாசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் மிகச் சிறந்த மைந்தராக திகழ்ந்தவர் ஜோதிபாசு. அனைவருக்கும் ஆதர்ச புருஷராக விளங்கியவர்.
இந்திய அரசியல் அரங்கில் மாபெரும் தலைவராக வியாபித்து, பல வருடங்கள் கோலோச்சிய பெருமைக்குரியவர் பாசு. மிகச் சிறந்த தியாகி, தேசபக்தர், சிறந்த ஜனநாயகவாதி. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்தவர் பாசு.
இந்திய மக்களுக்காக உழைத்தவர் பாசு. இந்த நாள் அனைவருக்கும் மிக சோகமான தினமாகும். இந்தியாவின் மிகச் சிறந்த இந்த மைந்தரை நாம் என்றென்றும் நினைவு கூருவோம். அவருடைய நினைவுகளுக்கு நான் சல்யூட் செய்கிறேன்.
முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார் பாசு. கடைசி சில தினங்களில் அவர் மிகவும் சிரமப்பட்டு விட்டார். மேற்கு வங்க அரசும், அவருடைய குடும்பத்தினரும் கடைசி நிமிடங்களில் அவருடன் இருந்தனர். மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் அவருக்கு செய்து தரப்பட்டன. இருப்பினும் அவர் மரணமடைந்திருப்பது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார் ப.சிதம்பரம்.
பாஜக ..
ஜோதிபாசுவின் மறைவுக்கு பாஜக இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி கூறுகையில், மக்களுக்காக உழைக்க தன்னை அர்ப்பணித்தவர் ஜோதிபாசு. அவருடைய கொள்கைளில் சற்றும் விட்டுக் கொடுக்காதவர். கொள்கைகளுக்கு மதிப்பு கொடுத்தவர்.
இந்திய அரசியல் தலைவர்களில் நெடிதுயர்ந்து விளங்கிய சிறந்த தலைவர்.
மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவர். அவருடைய மரணம் நாட்டுக்கு பேரிழப்பாகும் என்றார்.
காங்கிரஸ்...
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், இந்தியாவின் மதிப்புக்குரிய, மதிப்பு வாய்ந்த மைந்தர்களில் ஜோதிபாசு முக்கியமானவர். அவருடைய மரணத்தால் மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசமும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளது.
எளிமைக்குப் பெயர் போனவர் பாசு. இறுதி வரை தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் என்றார்.
அமிதாப் பச்சன்...
ஜோதிபாசு மரணமடைவதற்கு முன்பு அவரை கடைசியாகப் பார்த்த சிலரில் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் ஒருவர்.
பாசுவைப் பார்த்து விட்டு வந்த பின்னர் தனது பிளாக்கில் பாசு குறித்து புகழாரம் சூட்டியுள்ளார் அமிதாப் பச்சன்.
அதில்,
மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் பாசு. இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதிகளில் பாசுவும் ஒருவர். கடைசி வரை தனது கொள்கைகளில் உறுதியாகவும், நிலையாகவும் இருந்தவர் அவர்.
இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வர் பதவியில் நீடித்த பெருமைக்குரியவர் பாசு மட்டுமே. இது மிகப் பெரிய சாதனை. வியப்புக்குரிய சாதனையும் கூட.
இந்திய அரசியலில் மிக உயரமான கோபுரமாக விளங்கியவர் பாசு என்று புகழாரம் சூட்டியுள்ளார் பச்சன்.












Click it and Unblock the Notifications