எம்.ஜி.ஆரின் 93வது பிறந்த நாள் - ஜெ. புகழாரம் - அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

M G R
சென்னை: மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 93வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்குப் புகழாரம் சூட்டி அறிக்கை விட்டுள்ளார்.

மக்கள் திலகம் என மக்களாலும், புரட்சித் தலைவர் என அதிமுகவினராலும் அன்புடன் அழைக்கப்படும் எம்.ஜி.ஆருக்கு இன்று 93வது பிறந்த நாளாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், எம்.ஜி.ஆர். ரசிகர்களும் அவரது படங்களுக்கு மாலை சூட்டி, இனிப்புகள் வழங்கி, அதிமுக கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர்.

தெருக்கள் தோறும் எம்.ஜி.ஆர். படங்களை வைத்து அவரது பக்தர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிட்டு, இனிப்புகளையும் வழங்கினார்.

மேலும், மறைந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கினார். இதுதவிர இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த அ.தி.மு.க. இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதேபோல தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் அஞ்சலி செலுத்தினார்.

'அட்சயப் பாத்திரமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.'

முன்னதாக எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மக்களின் நினைவிலே என்றென்றும் நிலைத்து நின்று, கொண்டிருக்கின்ற மாமனிதர், அ.தி.மு.க. நிறுவனர், எம்.ஜி.ஆரின் 93-ஆவது பிறந்த நாள், நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டும் நாள். இந்த நாள் கோடான கோடி தமிழக மக்களின், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளின் உள்ளங்களில் உற்சாகமும், உவகையும், புத்துணர்ச்சியும், பூரிப்பும் கொள்ளும் ஆனந்தத் திருநாள்.

மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி, அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை கடைபிடித்து, மக்கள் நலன் காத்தவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எதிரிகளுக்கு தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்தவர். கருணை மழையால் மக்களின் உள்ளங்களை குளிர வைத்தவர்.

தான் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏழை, எளியோருக்கு வாரி வழங்கியவர். பணத்தை நம்பாமல் மக்கள் மனங்களை நம்பி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர். ஏழை, எளிய மக்களின் ஒளி விளக்காக, அல்லலைப் போக்கிடும் அட்சயப் பாத்திரமாக விளங்கியவர். அதனால் தான் இன்னமும் மக்கள் மனதில் மகத்தான சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அரசியலில், திரைத்துறையில், தனிமனித வாழ்வில், எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு சரித்திர நாயகனாக வாழ்ந்து காட்டியவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்.

இலவச சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி-சேலைத் திட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தியது, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு என பல்வேறு சாதனைகளை தனது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திக் காட்டியவர்.

எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்திற்கு உள்ள ஈர்ப்பு சக்தி ஈடு இணையற்றது. அந்த மகராசனை ஒரு முறை பார்த்துட்டா போதும், என் கஷ்டமெல்லாம் நீங்கி விடும்' என்று தமிழக மக்கள் நினைக்கும் அளவுக்கு நம்பிக்கையாய் வாழ்ந்தவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்தாலும், அவர் புகழ் காருள்ளளவும், கடல் நீருள்ளளவும் நிலைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவரது வள்ளல் தன்மை, மனித நேயம், சமுதாய சிந்தனை.

ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வற்றிய ஏரி, குளங்களையும், வாடிய பயிர்களையும் பார்வையிடுகிறார். இதற்குக் காரணம் கர்நாடகம் காவேரியில் தண்ணீர் திறந்துவிடாதது தான் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

உடனடியாக கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு, அவருடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வருவதாக தெரிவிக்கிறார். பல முறை விருந்துக்கு அழைத்த போது எல்லாம் வராத எம்.ஜி.ஆர்., தானாகவே வலிய வந்து விருந்துக்கு வருகிறேன் என்கிறார் என்று சொன்னதும், கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சருக்கு ஆனந்தம். ஆச்சரியம். மறுநாள் விருந்தில் பங்கேற்கிறார் எம்.ஜி.ஆர். விருந்துக்கு வந்த புரட்சித் தலைவரை கர்நாடக பொதுப் பணித் துறை அமைச்சரும், அவருடைய தாயாரும் அன்புடன் உபசரித்தனர்.

விருந்து ஆரம்பித்த உடனேயே புரட்சித் தலைவருக்கு விக்கல் வருகிறது. புரட்சித் தலைவருக்கு விக்கல் வருவதைப் பார்த்த அமைச்சரின் தாயார், தன் மகனிடம் "அவருக்கு விக்கல் வருகிறது; தண்ணீர் தரக்கூடாதா?" என்று கேட்கிறார். உடனே எம்.ஜி.ஆர். "உங்கள் மகன் எங்கே தண்ணீர் தருகிறார்?" என்று தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததையும், தமிழ்நாட்டில் பயிர்கள் வாடுவதையும் சூசகமாக தெரிவிக்கிறார்.

புரட்சித் தலைவரின் வருகைக்கான காரணத்தை புரிந்து கொண்ட கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர், கர்நாடக முதலமைச்சரிடம் இந்தத் தகவலை தெரிவிக்கிறார். கர்நாடக முதலமைச்சரும், "எம்.ஜி.ஆர். கேட்கும் உதவியை உடனடியாகச் செய்யுங்கள்" என்று உத்தரவிடுகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே காவேரித் தண்ணீர் வந்து சேர்ந்தது.

எல்லோரையும் வாழவைத்த தலைவன் இன்று இல்லை என்று நினைக்கும் தமிழக மக்களுக்கு, கழக உடன்பிறப்புகளுக்கு, அவருடைய பிறந்த தினம் தான் நலமான பரிசாக நாளும் நீடிக்கும். புரட்சித் தலைவரின் பிறந்த நாள் உலகம் போற்றும் உத்தம நாள். உண்மைத் தமிழரின் உணர்வு நாள். எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், தொண்டர்கள் மகிழும் சுந்தரத் திருநாள்.

எம்.ஜி.ஆரின் 93-ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி அளவிலும், இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு மற்றும் வட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே கம்பீரமாக நிற்கும் நம் கழகக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அல்லது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, உவகையுடன் கொண்டாட வேண்டும் என்று எனதருமைக் கழக உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+