ஜல்லிக்கட்டு தொடர்பாக கலவரம்- ஒருவர் கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
திண்டுக்கல் அருகே உள்ள பெருமாள்கோவில் பட்டி. இக்கிராமத்தில், பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நபர்கள் தங்களது காளைகளுடன் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இரு சமூகத்தினருக்கிடையே திடீரென மோதல் வெடித்தது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக இந்த மோதல் வெடித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு பெரும் மோதலாக மாறியது. இதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராமத்தினர் என கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு இன்று காலை திரண்டு சாலை மறியலில் குதித்தனர்.
கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருமாள்கோவில் பட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications