தாத்தாக்களிடம் இருந்த தமிழ் உணர்வு எங்கே போனது? - கருணாநிதி

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.தர்மலிங்கம் பேரன் ஏ.பிரதீப் - கே.வாணி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார் முதல்வர் கருணாநிதி.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது,
கனிமொழி குறிப்பிட்டதைப் போல், இந்த மண்டப வளாகத்திற்குள்ளே நுழைந்து வருகின்ற நேரத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பலகை களிலே தீட்டப்பட்டிருக்கின்ற படங்கள் இந்தக் குடும்பத்தினுடைய கீர்த்தியைப் பாடிக் கொண்டிருக்கின்றன.
திருவண்ணாமலையில் ப.உ. சண்முகம் என்று முதலில் திராவிட இயக்கத்திற்கு அறிமுகமான அந்தப் பெயரைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு தர்மலிங்கத்தின் பெயர் இடம் பெற்றதையும், ஆனால் அந்தப் பெயருக்குரிய தர்மலிங்கம் அசையாத, எதற்கும் மனம் குலையாத, எதிர்ப்புகளுக்கு அஞ்சாத மாவீரராக இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தார் என்பதையும், அவரோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையிலே நான் மிக மிக நன்றாக அறிவேன்.
அண்ணா அவர்களுக்கு அவர் விரும்பிய செல்லப் பிள்ளைகளில் ஒருவராக அருமை நண்பர் தர்மலிங்கம் விளங்கினார்.
அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற மணவிழா என்று நான் சொல்ல மாட்டேன், அவருடைய பேரனுக்கு நடைபெறுகின்ற திருமணம் என்று கூட நான் கூற மாட்டேன் உண்மையைச் சொல்ல வேண்டுமேயானால் இது என்னுடைய குடும்பத்தில் என்னுடைய பேரனுக்கு நடைபெறுகின்ற திருமணமாகத் தான் நான் கருதுகிறேன்.
வைதீகர்களுடைய கருத்துப்படி, எண்ணப்படி, கொள்கைப்படி, திருவண்ணா மலை தர்மலிங்கம் அவர்கள் இன்றைக்கு இந்த இடத்திலே இருப்பாரேயானால், அவர் என்னுடைய இந்த உரையைக் கேட்டு எவ்வளவு மகிழ்வார் என்பது எனக்குத் தெரியும். அவரை அறியாத பலருக்கு, அவருடைய கொள்கைப் பற்று – அவருடைய ஊக்கம் உறுதி இந்த இயக்கத்தின்பால் கொண்டிருந்த பாசம் இந்த இயக்கத்திற்காக எதையும் இழக்கத் தயார் என்ற தியாக மனப்பான்மை இவைகளைப் பற்றியெல்லாம் எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியாது.
இந்த இயக்கத்தை இன்றையதினம் உலகம் வியக்கின்ற அளவிற்கு உயர்த்தியதற்கு காரணகர்த்தாக்களிலே ஒருவர், ஏன் ஒரேயொருவர், மறைந்த நம்முடைய தர்மலிங்கம் தான். எப்படி இதைச் சொல்கிறாய் என்று கேட்பீர்களேயானால், பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற இயலாத ஒரு சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்த ஒரு சோக நிலையில் தமிழகமே ஆழ்ந்திருந்த நேரத்தில் அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காஞ்சிபுரத்திலே தங்கியிருக்க விரும்பாமல் அண்ணா அவர்கள் தர்மலிங்கத்தை அழைத்துக் கொண்டு வா, எங்கேயாவது ஓய்வெடுக்கலாம் என்று இருவரும் சென்றார்கள். அவர்கள் சென்ற பிறகு எனக்கு அண்ணாவிடத்திலிருந்தோ அல்லது தர்மலிங்கத்திடமிருந்தோ எந்தத் தகவலும் வரவில்லை.
நான் இந்த இடத்திற்கு ஓய்வெடுக்கப் போயிருக்கலாம் அண்ணா என்ற எண்ணத்தோடு பல இடங்களுக்கு, எனக்குத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பார்த்தேன். கிடைக்கவில்லை. நாள் காலை ஒன்பது மணிக்கு தொலை பேசியில் மணி அடித்தது நான் யார் என்று கேட்டேன் நான் தர்மலிங்கம் பேசுகிறேன் என்றார். எங்கேயிருந்து என்று கேட்டேன் கர்நாடக மாநிலத்திலே பெங்களூருக்குப் பக்கத்தில் ஒரு சிற்றூரிலிருந்து பேசுகிறோம் என்றார்.
என்ன, எங்கே, அண்ணாவை அழைத்துக் கொண்டு போய் விட்டீர்கள் என்று கேட்ட போது, இல்லையில்லை, உங்களிடத்திலே நான் ஒரு செய்தி சொல்ல வேண்டுமென்பதற்காகத் தான், உங்கள் கருத்தைக் கேட்க வேண்டுமென்பதற்காகத் தான் இந்தத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என்றார். என்னவென்று நான் பரபரப்போடு கேட்டேன்.
அப்போது சொன்னார். அண்ணா அவர்களின் இந்தத் தேர்தல் தோல்வியின் மூலம், இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையே நாம் இழந்து விட்டோமோ என்று நான் கவலைப்படுகிறேன். இதற்கு மாறாக நான் ஒரு யோசனை செய்து கொண்டிருக்கிறேன், அதற்கு உங்கள் ஒப்புதல் தேவை என்று தர்மலிங்கம் என்னிடம் சொன்னார்.
எதுவாக இருந்தாலும் கழகத்தின் மேல் மட்டத்திலே செயற்குழு, பொதுக்குழுவிலே தான் ஒப்புதல் பெற வேண்டும், தனிப்பட்ட முறையில் என்னிடம் எதற்காக ஒப்புதல் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். இல்லை, உங்களிடத்திலே சொன்னால், அதை கழகத்தின் முக்கிய தலைவர்களோடு ஆலோசித்து முடிவெடுப்பீர்கள் என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன் என்றார். சொல்லுங்கள் என்றேன், அப்போது சொன்னார்.
அண்ணா காஞ்சிபுரத்திலே வெற்றி பெற முடியவில்லை, சட்ட மன்றத்திலே அண்ணா இல்லை, நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள், இருந்தாலும் கூட இது காஞ்சிபுரத்திலே நமக்கு ஏற்பட்ட இந்த விளைவு ஒரு நன்மைக்காகத் தான் என்று நான் கருதுகிறேன் என்றார். என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு முதலிலே புரியவில்லை. பிறகு சொன்னார் அண்ணாவின் குரல் சென்னையிலே சட்டமன்றத்திலே கேட்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் மாத்திரம் கேட்டு மக்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.
அந்தக் குரல் டெல்லி பாராளுமன்றத்திலும் கேட்டு, அப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டெல்லியிலே பாராளுமன்றத்திலே உரையாற்றினார், இந்தக் கருத்தைச் சொன்னார், நாங்கள் நாட்டுப் பிரிவினை கேட்பதற்கு என்ன காரணம் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார் என்றால், அதை இதற்கு முன்பு நானோ, ஈ.வி.கே. சம்பத்தோ, மற்றவர்களோ சொன்னதைப் போல அல்லாமல் உலகம் முழுவதும் இருந்து எதிரொலிக்கின்ற குரலாக இருக்குமென்று நான் கருதுகிறேன், ஆகவே விரைவில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அண்ணா அவர்களை நாம் ஒரு வேட்பாளராக நிறுத்தி, மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும், அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் அகில உலக விளம்பரத்தைப் பெறும், நம்முடைய கொள்கைகள் அகில உலக அரசியல் வாதிகளால் கவனிக்கப்படும், நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்றார்.
நல்ல கருத்து இதற்கு அண்ணா ஒப்புக் கொள்ள வேண்டுமே என்றேன். நீங்கள் தான் ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்றார். பிறகு தொடர்ந்து பத்து நாட்கள் அண்ணா இருந்த பெங்களூர் வட்டாரத்திலே இருந்த அந்த ஊருக்கு தொலைபேசியில் தொடர்ந்து அண்ணாவிடம் பேசிப் பேசி அதன் காரணத்தாலும் தர்மலிங்கத்தின் வற்புறுத்தலாலும் அண்ணா அவர்கள் டெல்லி மாநிலங்களவை தேர்தலிலே நிற்பதற்கு ஒப்புக் கொண்டார்கள், வெற்றியும் பெற்றார்கள். அப்போது தான் பாராளுமன்றத்திலே தி.மு. கழகத்தின் குரல் – முதல் குரல், அண்ணாவின் குரலாக அன்றைக்கு ஒலித்தது என்றால், அதற்கு மறைந்தும் மறையாத என்னுடைய அருமை நண்பர் திருவண்ணாமலை தர்மலிங்கத் தின் கருத்தும், அவர் எடுத்த முயற்சியும் தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்திலே நமது குடும்ப விழாவிலே சொல்லியாக வேண்டும்.
அத்தகைய ஈடும் இணையுமற்ற தியாகிகளை இந்த இயக்கம் பெற்றதால் தான் இத்தகைய ஏற்றம் பெற்று இருக்கின்றது. அதனால் தான் இந்த இயக்கத்தைப் பார்த்து பலர் பொறாமைப்படுகிறார்கள். பலர் அல்ல, சிலர் பொறாமைப்படுகிறார்கள். சிலர் எரிச்சல் படுகிறார்கள். சிலர் இந்த இயக்கத்தை இன்னும் விட்டு வைப்பதா என்று ஆர்த்தெழுகிறார்கள். அவர்களை யெல்லாம் மீறி இந்த இயக்கம் இன்றைக்கு வளர்ந்து வருகிறது, வெற்றிக் கொடி நாட்டுகிறது என்றால், அது தர்மலிங்கம் போன்றவர்கள் அன்றைக்கு இட்ட உரம், எரு – அதிலே வளர்ந்த செடி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதாலே தான். எனவே இதை வீழ்த்தி விடலாமென்று திராவிட இனத்தின் குரலாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாமென்று தமிழகத்திலே இன்றைக்கு முளைத்து எழுந்திருக்கின்ற எந்தக் கட்சியானாலும் எந்த இயக்கம் ஆனாலும் கத்தி தீட்டுவார்களேயானால், நான் அவர்களுக்குச் சொல்கின்ற ஒரேயொரு பொன்மொழி அண்ணாவின் பொன்மொழி கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு – என்பது தான்.
இதைத் தான் நான் தி.மு. கழகத்தை வீழ்த்துவதற்கு இந்த இயக்கத்தின் கொள்கைகளை சாய்ப்பதற்கு இன்றைக்கு படையெடுத்து வருகின்றவர்களுக்கெல்லாம் தருகின்ற பாடமாகும். அத்தகைய பாடத்தைத் தரு கின்ற இடங்களிலே ஒன்றாக இந்த மணவிழா மண்டபம் பெற்றிருக்கிறது என்பதிலே தான் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒன்று நம்முடைய தமிழ்ப் பற்றும் நாம் வளர்த்த தமிழ் ஆர்வமும் தமிழிலே நாம் கொண்டிருக்கின்ற அக்கறையும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ் என்று நாம் கூறுகின்ற அந்த வாசகங்களும், அதை மேலும் மேலும் வளர்ப்பதற்காகத் தான் விரைவில் நடத்த விருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் இவைகள் எல்லாம் நம்முடைய மொழியை – தாயை வணங்குவதற்காக, வாழ்த்து வதற்காக, மேலும் அந்த மொழியை வளர்ப்பதற்காகச் செய்யப்படுகின்ற காரியங்களாகும்.
தி.மு. கழகத்திலே இளைஞர்களை உருவாக்குகின்ற ஒருவனாக நான் இருந்த காலத்தில் சில நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதுவார்கள். நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய பெயரை மட்டும் கருணாநிதி என்று வைத் திருக்கிறீர்களே என்று கேட்பார்கள். நான் அவர்களுக்குச் சொன்ன பதில் கருணாநிதி என்பது பொதுவாக எல்லா கடவுளுக்கும் உள்ள பெயர் இஸ்லாமிய மதத்திலும், இந்து மதத்திலும், வைஷ்ணவ மதத்திலும் அவர்கள் வணங்குகின்ற தெய்வத்தை கருணாநிதி என்று தான் சொல்வார்கள், அதனால் தான் என் பெயர் கருணாநிதி என்று வைக்கப்பட்டிருக்கின்றது, கருணை நிதிஎன்று அவர்களுக்கு நான் பதில் எழுதியிருக்கிறேன். அவைகளை யெல்லாம் நான் அலட்சியப்படுத்த மாட்டேன், விளக்கம் அளிப்பேன். அப்படி எழுதி எழுதித் தான் கடிதம், இன்றைக்கு முரசொலியிலே நீண்ட கடிதங்கள் எழுதி விளக்கங்கள் தருகின்ற அளவிற்கு நான் வளர்ந்தேன்.
உங்களுடைய குடும்பத்தில் ஸ்டாலின் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறீர்களே என்றெல்லாம் எழுதுவார்கள். ஸ்டாலின் என்பது வட மொழி அல்லவா என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு என்ன பதில் எழுதினேன் என்றால் என்னுடைய மூத்த மகன் மு.க. முத்து என் தந்தையின் பெயர் முத்துவேல், அந்தப் பெயரை முன் வைத்து முத்து என்று பெயர் வைத்தேன். அடுத்தது, நான் இந்த இயக்கத்திற்கு வரக் காரணமாக இருந்த தளபதி அழகிரி சாமி, அந்த அண்ணன் அழகிரியை மனதிலே வைத்து சூட்டிய பெயர் மு.க. அழகிரி. அடுத்து ஸ்டாலின், ஸ்டாலின் பிறந்த போது தான் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்தார், அந்த நினைவாக, அந்த இலட்சியத்தின் அடையாளமாக ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறேன். அடுத்தது தமிழரசு ஒரு மகனின் பெயர். தமிழ் மீது எனக்குள்ள பற்றின் காரணமாக, குடும்பத்தாருக்கு உள்ள பற்றின் காரணமாக தமிழரசு என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒருவேளை விரைவில் தமிழரசு வரப்போகிறது என்பதைக் காட்டுவதற்காகவோ, அதை எதிர் பார்த்தோ அந்தப் பெயரை அந்தக் காலத்தில் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் நினைக்கிறேன்.
செல்வி, அதுவும் தமிழ்ப் பெயர் தான். அது ஒன்றும் வட மொழிப் பெயர் அல்ல. கனிமொழி, தமிழ்ப் பெயர் தான். கனிமொழி, கயல் விழி, தேன்மொழி என்று இப்படித் தான் என் குடும்பத்திலே பெயர்கள் இருக்கும். நம்முடைய பேராசிரியர் குடும்பத்திலும் இப்படித் தான் பெயர்கள் இருக்கும். வீராசாமியின் குடும்பத்திலே எப்படியோ, எனக்குத் தெரியாது. துரைமுருகன் குடும்பத்திலே ஏறத்தாழ எல்லாமே தமிழ்ப் பெயர்கள் தான். ஒரே குழந்தை தான், நீங்கள் கதிரவன் என்று பெயர் வைத்தீர்கள் என்கிறார்.
ஆனால் வேடிக்கை என்ன வென்றால் திராவிட இயக்கத்தின் தாக்கம், தமிழ்ப் பற்று, தமிழ் மீது நாம் கொண்டிருக்கின்ற வேகம் இவைகள் எல்லாம் ஒரு காலக் கட்டத்திற்குத் தான். அடுத்து, அடுத்து வந்த தலைமுறைகள் மகன், பேரன், பேத்தி என்று இவர்கள் எல்லாம் தாத்தாவினுடைய தமிழ் மொழிப் பற்றை தமிழ் ஆர்வத்தை எங்கேயோ தள்ளி விட்டார்கள்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், மேடைக்கு மேடை சொல்வார் பிறக்கின்ற குழந்தைகளுக்கெல்லாம் தமிழ்ப் பெயர் வையுங்கள் என்று சொல்வார், அழுத்தந்திருத்தமாகச் சொல்வார், ஆதார பூர்வமாகச் சொல்வார். அப்படிச் சொன்னவரின் வீட்டில் ஜெயஸ்ரீ போன்ற பெயர்கள் இன்றைக்கு இருக்கின்றன. அதைப் போல நம்முடைய தர்மலிங்கம் அவர்களின் வீட்டில் அன்பழகன் என்பது தர்மலிங்கம் இருந்த வரையிலே வைக்கப்பட்ட பெயர்.
தர்மலிங்கத்திற்கு பிறகு, அன்பழகனுக்கு அந்த உணர்வு ஏன் இல்லாமல் எங்கே போயிற்று? எங்களுடன் பழகிய அந்த உணர்வு போய் விட்டதா? உண்மையிலேயே பழகியிருந்தால் அந்த உணர்வு மேலோங்கி இருந்திருக்க வேண்டுமே? ஏன் பிரதீப் என்று பெயர் வைத்தார்.
எனவே மண மகனுக்கு நான் இன்றைக்குச் சொல்கிறேன். இந்த மணவிழாவிலே நான் இதைச் சொல்வதற்கு அடையாளமாக மணமகனின் பெயரை இந்த மேடையிலே பிரதீப் என்ற பெயரை மாற்றுவதற்கு எனக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறேன். ஏனென்றால் மணமகனின் தாத்தா தர்மலிங்கம் மாத்திரமல்ல, நானும் தாத்தா தான். ஆகவே நான் அந்த உரிமையோடு சொல்கிறேன் (மணமகனை அருகே அழைத்து) மணமகனைப் பார்த்தால் தர்மலிங்கத்தைப் போலவே எனக்குத் தோன்றுகின்றது.
அப்படிப்பட்ட உருவம் உருவம் மாத்திரம் அப்படியிருந்தால் போதாது, உள்ளமும் அப்படி இருக்கவேண்டும். உறுதியும் அப்படி இருக்க வேண்டும் என்ற அந்த வாழ்த்துகளோடு இன்று முதல் தம்பி பிரதீப்பை மதிவாணன் என்று அழைக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications