44 நிகர்நிலை பல்கலை.கள் அங்கீகாரம் ரத்து-தமிழகத்தில் 17

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது சமீப காலமாக சரமாரியாக புகார்கள் குவிந்து வந்தன. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. இக்கமிட்டி நடத்திய ஆய்வில், 13 மாநிலங்களில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதை கண்டுபிடித்தது.
இதையடுத்து அந்த 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்து தற்போது உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வக்கீல் விப்லாவ் யாதவ் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையின்போது, இதை நேற்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்,
நாடு முழுவதும் உள்ள 126 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 38 பல்கலைக்கழகங்கள் நன்றாக செயல்படுகின்றன. 44 பல்கலைக்கழகங்கள் தரமாக செயல்பட, அவற்றுக்கு 3 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மீதி 44 பல்கலைக்கழகங்களில் விதிமீறல்கள் நடப்பதை மத்திய அரசின் ஆய்வுக் கமிட்டி கண்டுபிடித்துள்ளது.
இந்த நிறுவனங்களில் விரும்பத்தகாத நிர்வாக முறை செயல்படுகிறது. அவை, கல்வியாளர்களால் நிர்வகிக்கப்படாமல், உரிமையாளரின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகின்றன. கல்வி நிறுவனம் போல் அல்லாமல் குடும்ப நிறுவனமாக நடத்தப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல், மாணவர்களை சேர்த்தல், சம்பந்தம் இல்லாமல் பாடத்திட்டத்தை மாற்றுதல், அதிக கட்டணம் வசூலித்தல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களால், இவை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக நீடிக்கும் தகுதி அற்றவை.
இவற்றில் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. வேறு சில பல்கலைக்கழகங்கள், போதிய ஆசிரியர்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி இயங்குகின்றன.
எனவே, மேற்கண்ட 44 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுமாறு, பி.என்.தாண்டன் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. அதை ஏற்று, அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும், இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த கல்வி நிறுவனங்கள், அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழங்களின் கீழ் உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
அங்கீகாரம் ரத்தான பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றின் கீழ் 45 கல்லூரிகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரத்தான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விவரம்...
1. செயின்ட் பீட்டர் இன்ஸ்டியூட் சென்னை.
2. நூருல் இஸ்லாம் உயர் கல்விக் கழகம், கன்னியாகுமரி.
3. மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு அகாடமி, சென்னை.
4. செட்டிநாடு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, காஞ்சீபுரம்.
5. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், சென்னை.
6. சவீதா மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கழகம், சென்னை.
7. கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கழகம், விருதுநகர்.
8. பெரியார் அறிவியல் தொழில் நுட்பக் கழகம், தஞ்சை. 9. அமெட் பல்கலைக்கழகம், சென்னை.
10. வேல்ஸ் இன்ஸ்டியூட், சென்னை.
11. கற்பகம் உயர் கல்வி அகாடமி, கோவை.
12. வேல் டெக், சென்னை.
13. ஸ்ரீபாலாஜி வித்யா பீத், புதுச்சேரி.
14. விநாயகா மிஷன், சேலம்.
15. பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், சென்னை. 16. பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டியூட், தஞ்சை.
17. ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டியூட், ஸ்ரீபெரும்புதூர்.












Click it and Unblock the Notifications