ஜோதிபாசு இறுதி ஊர்வலம்-லட்சக்கணக்கானோர் பிரியாவிடை

பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த பீஸ் பார்லர் என்கிற மையத்திலிருந்து ஜோதிபாசுவின் உடல், இன்று காலை 8 மணியளவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
வெள்ளை நிற உடை அணிந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சாலையின் இரு மருங்கிலும் கூடி நின்று செங்கொடிகளைக் கையில் ஏந்தி, சல்யூட் அடித்து ஜோதிபாசுவுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
ஜோதிபாசுவின் உடல் கொண்டு செல்லப்பட்ட சாலைகள் நெடுகிலும் லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
கொல்கத்தா போலீஸ் பைலட் கார் முன்செல்ல ஜோதிபாசுவின் உடல் அடங்கிய சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த வாகனம் பின்னால் சென்றது. பீஸ் பார்லரிலிருந்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தொலைலில் உள்ள சிபிஎம் தலைமை அலுவலகத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஏஜேசி போஸ் சாலையில் பெருமளவில் மக்கள் சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்தனர்.
கட்சி தலைமை அலுவலகம் வந்த பின்னர் அங்கு சிபிஎம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மூத்த தலைவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.
பின்னர் பாசுவின் உடல் அங்கிருந்துச சட்டசபை வளாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ரைட்டர்ஸ் பில்டிங் வளாகத்தில் இதற்காக சிறப்பு மேடை போடப்பட்டுள்ளது. அங்கு பாசுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாலை 3 மணி வரை உடல் வைக்கப்பட்டிருந்தது.
மூன்றரை மணிக்கு மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்ட ஜோதிபாசுவின் உடலுக்கு விக்டோரியா மெமோரியல் அருகில் உள்ள மொஹ்ர்கஞ்ச் பகுதியில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மாலை 4 மணிக்கு ஜோதிபாசுவின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் கொல்கத்தா அரசு மருத்துவமனையான எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. ஜோதிபாசுவின் மகன் சந்தன் பாசு, தனது தந்தையின் உடலை, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
ஹசீனா, சோனியா, பிரணாப் அஞ்சலி:
முன்னதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 30 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினருடன் கொல்கத்தா வந்தார்.
மேற்கு வங்க சட்டசபை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜோதிபாசு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜோதிபாசுவின் உடலுக்கு அருகே ஐந்து நிமிடங்கள் மெளனமாக நின்றார். பின்னர் முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவுடன் பேசினார்.
ஹசீனா வந்த குழுவில் முன்னாள் பிரதமர் எர்ஷாத்தும் இடம் பெற்றிருந்தார். அவரும் ஜோதிபாசு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் ஜோதிபாசு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் கேரள அமைச்சர் மயக்கம்:
முன்னதாக ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள கொல்கத்தா வந்த கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் இன்று காலை பாசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மேடையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை கம்யூனி்ஸ்ட் தொண்டர்கள் கைதாங்கலாக அழைத்துச் சென்று அமர வைத்த பின் அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.
அதிமுக சார்பில் மலைச்சாமி அஞ்சலி:
அதிமுக சார்பில் அக் கட்சியின் மாநிலங்களவை எம்பி மலைச்சாமி, பாசுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை, தியாகராய நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜோதிபாசு உருவப் படத்திற்கு, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications