நளினி விடுதலையா?: நாளை ஆய்வுக் குழு கூடி விவாதிக்கும்
வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 11 பேரின் விடுதலை குறித்து ஆராந்து பரிந்துரை வழங்கும் குழுவினரின் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை விடுதலை செய்யகோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயாஸும் விடுதலை கோரியுள்ளார். இவரும், நளினியும் கடந்தாண்டு விடுதலை தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தனிக்குழு அமைக்கலாம் என்று சிறைத் துறை நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அளித்தது.
அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்பட 11 பேர் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் சிறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் குற்றவாளிகள் தரப்பு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட பரிந்துரைக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளின் தண்டனை மற்றும் நன்னடத்தை குறித்து இந்த குழு விவாதிக்கும். பின்னர் அவர்களை விடுதலை செய்வது குறித்து தங்கள் முடிவை இந்த குழு அரசுக்கு அனுப்பும். அதன் மீது அரசு இறுதி முடிவு எடுக்கும்.
பரிந்துரைக் குழு கூட்டம் நாளை புதன் கிழமை நடைபெறும் என தெரிகிறது. நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் தள்ளி வைக்கப்படலாம் என்றும் உயர் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications