நாராயணனை 'ஒடுக்கிய' ப.சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

Chidambaram
டெல்லி: புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ன மாதிரியான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

அதில் முக்கியமானது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இனிமேல், உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடக் கூடாது, வெளியுறவுக் கொள்கைகளில் மட்டுமே அவர் தலையிட வேண்டும் என்பது. இதை பிரதமர் ஏற்பார் எனத் தெரிகிறது.

தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், காங்கிரஸ் அரசின் கடைசிக்காலம் வரை அப்படியே நீடிப்பார் என்று தான் சில தினங்களுக்கு முன்பு வரை டெல்லி வட்டாரத்தில் நிலவி வந்த பேச்சு. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் நாராயணன்.

நாராயணன் தூக்கி அடிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் ப.சிதம்பரம் தான் என்று பேச்சு அடிபடுகிறது. நாராயணனின் தேவையில்லாத பல தலையீடுகளால் கடுப்பான சிதம்பரம் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளால் தான் நாராயணன் ஆளுநராக்கப்பட்டார் என்கிறார்கள்.

'மகா சோம்பேறியான' சிவராஜ் பாட்டீல் கையில் உள்துறை அமைச்சகம் இருந்தவரை உள்நாட்டுப் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருந்து வந்தது. மும்பையில் நடந்த தாக்குதலையடுத்து அவரை தூக்கிவிட்டு சிதம்பரம் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார்.

இந்தப் பதவிக்கு வந்தவுடனேயே உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் அப்படியே புரட்டிப் போட்டார் சிதம்பரம்.

ஐ.பி, ரா, முப்படைகளின் உளவுப் பிரிவுகள் தினமும் தனக்கு ரிப்போர்ட் தந்தாக வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார். அந்த ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு அனைத்து உளவுப் பிரிவின் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் தினமும் ஆலோசனை நடத்துகிறார் சிதம்பரம். இதை வெளியூருக்குப் போனாலும் அவர் 'மிஸ்' செய்வதில்லை. கான்பரன்ஸ் கால் போட்டு அனைவரும் அன்றைய முக்கிய தகவல்களை பரிமாறிக் கொண்டாக வேண்டும், எந்தெந்த மாநி்லத்துக்கு என்ன மாதிரியான தகவல் போய்ச் சேர வேண்டும் என்பதும் அப்போதே முடிவாகிறது.

சிவராஜ் பாட்டீல் இருந்தவரை அவரது வேலையையும் சேர்த்து நாராயணனே பார்த்தார். இதனால் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களை பிரதமருடன் நாராயணனே டைரக்டாக பேசுவார். முடிவுகளையும் எடுப்பார். இதனால் பெரும் பலமிக்கவராக மாறினார் நாராயணன்.

ஆனால், சிதம்பரம் உள்துறையை முழு அளவில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, நாராயணனுக்கு பெரிய வேலை ஏதும் இல்லாமல் செய்துவிட்டார்.

இதுவரை நாராயணனிடம் ரிப்போர்ட் செய்து வந்த பல்வேறு உளவு ஏஜென்சிகளும் தற்போது ப.சிதம்பரத்திடமே நேரடியாக ரிப்போர்ட் செய்கின்றன. இதன் மூலம் மகாபலம் வாய்ந்த நாராயணனின் அடிப்படையையே பெருமளவில் அசைத்து விட்டார் ப.சிதம்பரம் என்கிறார்கள்.

மேலும் சிதம்பரம் பொறுப்பேற்றது முதல் குண்டுவெடிப்புகள், தாக்குதல்களும் பெருமளவில் குறைந்துவிட்டதால் பிரதமரும் சோனியாவும் மகா திருப்தியில் உள்ளனர்.

இந் நிலையில் அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார் என்ற கேள்வி தற்போது பெரிதாகியுள்ளது. இந்தப் பொறுப்புக்கு எஸ்.எஸ்.மேனன் எனப்படும் சிவசங்கர மேனன் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமிக்கப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். புதிதாக வரப் போகிறவர் என்ன வேலையைப் பார்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பெரும் விவாதங்களும், சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

இது தொடர்பாக சிதம்பரம் சில யோசனைகளை பிரதமரிடம் தெரிவித்துள்ளாராம். அவற்றில் சிலவற்றை பிரதமர் ஏற்பார் எனத் தெரிகிறது. சிதம்பரம் சொன்ன முக்கிய யோசனைகளில் ஒன்று- உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை ஈடுபடுத்தக் கூடாது. மாறாக, அவரது முக்கியப் பணியாக வெளியுறவு விவகாரங்களை
கையாளுவது மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாராம் சிதம்பரம்.

உள்நாட்டு பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் பார்த்துக் கொள்ளும். தேவைப்பட்டால் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக ஒருவரை நியமிக்கலாம் என்று கூறிவிட்டாராம். அவரும் கூட உள்துறை அமைச்சருக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அப்போது தான் வேலை நடக்கும். இல்லாவிட்டால் யார் பெரியவர் போட்டியிலேயே கதை கந்தலாகிவிடும் என்று கூறிவிட்டாராம். சிதம்பரம் சொல்வதை பிரதமரும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. இதனால் தான் நாராயணனை
டெல்லியை விட்டுக் கிளப்ப ஒப்புக் கொண்டார் என்கிறார்கள்.

இதன்மூலம் அடுத்து எஸ்.எஸ்.மேனன் வந்தாலும் சரி, ஷியாம் சரண் வந்தாலும் சரி அல்லது ரொனெனன் சென் வந்தாலும் சரி, தேசிய பாதுகாப்பு குறித்து அவர்கள் ப.சிதம்பரத்திற்கு அட்வைஸ் கூறத் தேவையிருக்காது. மாறாக உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான எந்த விவகாரத்திலும் இனி தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் தலையீடு இருக்காது என்று கருதப்படுகிறது.

மேலும், உள்துறையை பிரிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளாராம். மத்திய அரசு-மாநிலங்களுக்கு இடையிலான உறவை பேணுவது, மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுகளுக்கு கொண்டு போவது.. இது தான் உண்மையில் உள்துறை அமைச்சககத்தின் பணி.

இதை மட்டும் உள்துறை அமைச்சகம் செய்யலாம். உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய உள்துறையை பிரித்து 'இன்டீரியர் மினிஸ்ட்ரி' என்ற அமைச்சகத்தை உருவாக்கலாம், அந்த அமைச்சகம் பாதுகாப்பை மட்டும் கையாளலாம் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். இதை பிரதமர் பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது.

எப்படியிருந்தாலும் இனி வரப் போகும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப.சிதம்பரத்தின் பணிகளில் தலையிடும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

தனது புத்திசாலித்தனம், அட்டகாசமான செயல்பாடுகள் மூலம் டெல்லியின் மிக முக்கிய அதிகார மையங்களில் ஒன்றாக ப.சிதம்பரம் மாறியுள்ளார்.

சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமான நாராயணனையே, ப.சிதம்பரத்தின் அசைத்துவிட்டதை ஆச்சரியத்தோடு பார்க்கிறது டெல்லி அதிகாரிகள் வட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+