பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்!!-புலிகள்

Subscribe to Oneindia Tamil
Prabhakaran
கொழும்பு: பிரபாகரன் பற்றி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவர் உயிருடன் நலமாக, பாதுகாப்பாக உள்ளார் என்றும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பு குறித்து மீண்டும் மாறுபட்ட தகவல்கள் வரத் துவங்கியுள்ளன.

இறுதிகட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவரது உடலையும் காட்டியது. ஆனால் அவர் உடல் என காட்டப்பட்டதில் பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டன.

இன்னொரு பக்கம், பிரபாகரன் உடல் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தினத்தில், விடுதலைப் புலிகள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பத்மநாதன் பிரபாகரன் இன்னும் உயிருடன், நலமாக இருக்கிறார் என்று கூறினார். புலிகளின் தீவிர ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவே கூறி வருகின்றனர்.

இந் நிலையில் கே.பத்மநாதன் திடீரென, பிரபாகரன் போரில் இறந்துவிட்டார். இது உறுதியான தகவல் என்று பல்டி அடித்தார். ஆனாலும் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் இன்றுவரை, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் அடிப்படையில்தான் இதை சொல்கிறோம். பாதுகாப்பு கருதி அவர் இருக்கும் இடத்தை சொல்ல முடியாது என்று கூறி வருகின்றனர்.

இந் நிலையில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வ இணையத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள www.lttepress.com என்ற தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புலிகள் செய்தித் தொடர்பாளர் தமிழ்மாறன் விடுத்துள்ள இந்த அறிக்கையில் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார் என்று தலைப்பிட்டு இந்த அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கை:

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகு விரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார். சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம். இழப்புகள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.

சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது. சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புலிகளின் இந்த அறிக்கையை தமிழ் ஊடகங்கள் தற்போது முக்கியச் செய்தியாக வெளியிடத் துவங்கியுள்ளன.

மேலும் விடுதலைப் புலிகள் இன்னொரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் 19.5.2009க்கு பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட சோகமான சம்பவத்தின் காரணமாக செயல்படாமல் இருந்த மாவீரர் பனிமனை ஆவணக் காப்பகம், தொடர்பகம் ஆகிய முக்கிய அங்கங்கள் 8.1.2010 முதல் செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...