புதுச்சேரி: மாநில அந்தஸ்தை எதிர்த்த மனு தள்ளுபடி
புதுச்சேரி: புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக்கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய 4 பகுதிகளையும் இணைத்து தனி மாநில அந்தஸ்து கோரப்பட்டு வருகிறது. இதற்கான முயற்சியில் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரியில் இப்போது 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநில அந்தஸ்து கிடைத்தால் எம்.எல்.ஏ.க்களின் பலம் 40ஆக உயரும். எம்.எல்.ஏ.க்களின் பலம் உயர்ந்தால் அரசியல் ரீதியாக கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
தற்போது தெலுங்கானா பிரச்னையால் இவ்விஷயத்தில் அடக்கி வாசித்தாலும், இக்கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் நிலையில் தான் மத்திய அரசு உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், 'அரசியல்வாதிகள் தங்கள் சொந்தலாபத்துக்காக புதுச்சேரியை தனிமாநிலமாக்க திட்டமிடுகிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் (யூனியன் பிரதேசம் என்ற அடிப்படையில்) இருந்து புதுச்சேரி விலகுமானால், நிதி வரத்து குறையும், என்ற ரீதியில் சிலர் பிரச்னை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து முடிவெடுக்கும் முன் மக்களின் எண்ணத்தை அறியும் வகையில் பொதுவிவாதம் நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த குடியிருப்பு சங்கத்தினர் சிலர் பொதுநல வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த பெஞ்ச், 'இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் மனுதாரர் வேறு நிலையில் இருந்து தான் அணுகவேண்டும்.
இது அரசு நிர்வாகம் மற்றும் கொள்கை சம்பந்தப்பட்ட முடிவு. இதில் பொதுவிவாதம் நடத்துமாறு மத்திய அரசை நீதிமன்றம் எப்படி கேட்டுக்கொள்ள முடியும்.
இதில் நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு ஒன்றும் இல்லை' எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications