தெலுங்கானா: கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை
ஹைதராபாத்: ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திராவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துவரும் தெலுங்கானா போராட்டத்தில் கணிசமான அளவுக்கு மாணவர்களும் பங்கேற்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், வாராங்கல் ககாதியா பல்கலை, கரீம்நகர் சதாவாஹனா பல்கலை, மெஹபூப்நகர் பாலமுரு பல்கலை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் தனி தெலுங்கானா கோரி போராடி வருகின்றனர்.
பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் தனி தெலுங்கானாவுக்காக தேர்வு புறக்கணிப்பு மற்றும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் எம்.சி.ஏ படித்து வந்த வேணுகோபால் ரெட்டி என்ற மாணவர் ஒருவர் தனி தெலுங்கானாவை வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் உப்பளில் உள்ள லலிதா பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த சம்பவத்தால் இன்று பல கல்லூரிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தேர்வுகளை புறக்கணித்தனர்.
மாணவர்கள் அனைவரும் தேர்வுகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோரியுள்ளனர். மேலும் நாளை மீண்டும் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
குழப்பத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பிக்கள்!:
தனி தெலுங்கானா போராட்டத்தின் போது, ராஜினாமா செய்த மாநில அமைச்சர்களுடன் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கடந்த வாரம் அவர்கள் தங்கள் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் ராஜினாமாவை வாபஸ் பெறாத எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி, மாநில காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாசை தொடர்பு கொண்டு இப்பிரச்னை குறித்து விவாதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் இன்று தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களின் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் ராஜினாமா முடிவை அனைவரும் வாபஸ் பெறவேண்டும் என ஸ்ரீனிவாஸ் வலியுறுத்தினார்.
எனினும் எம்.எல்.ஏ, எம்.பி.க்களில் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இவ்விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே 21ம் தேதி மீண்டும் கூட்டம் நடக்கிறது.
இதற்கிடையே, தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டிருக்கும் போராட்டக் குழுவினர், மத்திய அரசு தனிமாநில உத்தரவாதத்தை தரவில்லை என்றால் ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என அறிவித்துள்ளது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் தெலுங்கானா போராட்டக் குழுவுக்கு ஆதராவாக இருப்பதா அல்லது கட்சி மேலிடத்துக்கு விசுவாசமாக இருப்பதா என புரியாமல் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
துணை முதல்வரை நியமிக்க திட்டம்:
ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரான கீதா ரெட்டியை மாநில துணை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆந்திரா சட்டசபையில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பே தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த கீதா ரெட்டியை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு கீதாரெட்டி மறுப்பு தெரிவித்தால், சபாநாயகர் கிரண்குமார் ரெட்டியை துணை முதல்வராவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications