நிகர்நிலை அந்தஸ்து ஊழல்-விசாரணை கோரும் சிபிஎம்
மதுரை: தகுதியில்லாத கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்கியது குறி்த்து விசாரணை நடத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து என்.வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும், 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடைச்சரக்காக்கப்பட்ட கல்வி வியாபாரத்தின் ஒட்டுமொத்த சீரழிவை காட்டுவதாக உள்ளது.
இந்த நடவடிக்கை காலங்கடந்த நடவடிக்கை என்றாலும், இவற்றை கல்லூரிகளாக மாற்றி ஏற்கனவே அவை இருந்த பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டு வருவது என்ற முடிவு வரவேற்புக்குரியது. இவற்றில் கணிசமானவை தமிழ்நாட்டில் இயங்குபவையாக உள்ளது.
மேலும், அவை அனைத்தும் அரசியல் செல்வாக்கும், அரசியல் பின்னணியும் கொண்டவர்களால் நடத்தப்படுபவை என்பதும் வேதனைக்குரிய செய்தியாகும்.
அதனால், குற்றச்சாட்டுக்கு ஆளான பல்கலைக்கழகங்களின் அதிபர்கள், நிர்வாகிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதோடு, அவர்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications