'வன்னியர்களின் காவலர் கருணாநிதி'-ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
பென்னாகரம்: வன்னியர்களுக்காக என்றென்றும் பாடுபடுபவர், உழைப்பவர் முதல்வர் கருணாநிதி மட்டுமே என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கான பாமகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

இங்கு நேற்று பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இனமா? பணமா? என்று கேட்டிருக்கிறார். அவர் தேர்தலின் போது தான் தனது இனத்தை பற்றி பேசுவார்.

இரண்டாவதாக வன்னியர்களை கலைஞர் தலைமையிலான கழக அரசு புறக்கணித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் முதல்வர் கருணாநிதி தான் வன்னியர் சமுதாயத்துக்கு ஒரு நல்ல சிறப்பு கொடுத்து பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார். அவற்றில் ஒன்றிரண்டை நான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

1987ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடுக்காக போராடினார்கள். ஒரு வாரம் சாலை மறியல் நடந்தது. அப்போது அதிமுக ஆட்சி நடந்தது. ஆனால் அந்த போராட்டத்திற்கு எந்த பலனும் வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 27 பேர் உயிரிழந்தது தான் கிடைத்த பலன். அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் கவனிப்பாரற்று, கேட்பாரற்று இருந்தனர்.

அதன் பின்னர் 1989ம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்டு, முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் துப்பாக்கி சூட்டில் இறந்த அந்த குடும்பங்களுக்கு, வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிரிழந்தவர்களின் தியாகத்தை மதித்து தியாக குடும்பங்களாக கருதி அவர்களது வீடு தேடி தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தார்.

ஒரே தடவையாக ரூ.3 லட்சம் அளித்ததுடன், பிற்காலத்தில் அந்த குடும்பங்கள் தத்தளித்துவிடக் கூடாது என்பதற்காக மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை இன்றைக்கும் அளித்து வருபவர் முதல்வர் கருணாநிதி.

எந்த இலக்குக்காக போராடினார்களோ அந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தவர் முதல்வர் கருணாநிதி தான்.

அதுமட்டுமல்ல, அண்ணாவுக்கு பின் 69ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றதும் முதன்முதலாக ராயப்பா என்ற வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை தலைமை செயலாளராக்கினார். போலீஸ் துறையின் தலைமை பொறுப்பை ராஜ்மோகன் என்ற வன்னிய சமுதாய அதிகாரிக்கு வழங்கினார்.

தொடர்ந்து இன்றைக்கு எடுத்துக் கொண்டால் கூட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக காசிவிஸ்வநாதனை நியமித்தார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக சந்திரசேகரனை நியமித்தார். அரசின் உயிர்மூச்சு துறையான வருவாய் துறை செயலாளராக தனவேலை நியமித்தார்.

நெடுஞ்சாலைத் துறை செயலாளராக சந்தானத்தை நியமித்தார். இந்து அறநிலையத் துறை ஆணையராக சம்பத்தை நியமித்தார். விவசாயத்துறை இயக்குநராக கோசல்ராமை நியமித்தார். இவர்கள் எல்லாம் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவர்.

அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தராக சபாபதி மோகனை நியமித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக தங்கராஜை நியமித்தார். கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகபூபதியை நியமித்தார். இப்படி கல்வித்துறையிலும் முக்கியத்துவம் கொடுத்து வன்னிய சமுதாயத்தை சேர்ந்த அதிகாரிகளை நியமித்தார்.

இப்படி என்றைக்கும் வன்னியர்களுக்கு உற்ற துணையாக இருப்பவர், பாடுபடுபவர் முதல்வர் கருணாநிதி தான். ஆனால் டாக்டர் ராமதாஸ் தேர்தலுக்காக மட்டுமே வன்னியர்கள் பற்றி பேசுபவர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக மத்திய ஆட்சியில் பங்கு பெறும் என்று கருதி அவர்களுடன் கூட்டணி வைத்தார். 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா பதவி என்று ஒப்பந்தம் போட்டார். 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் அவரை புறக்கணித்தார்கள். ஆனால், அவர் இப்போது அதிமுக, திமுக சேர்ந்து தோற்கடித்ததாக கூறுகிறார். மக்கள் தான் அவரை தோற்கடித்தார்கள். 7 தொகுதிகள் மட்டுமல்ல, 8வதாக ராஜ்யசபை பதவியையும் சேர்த்து தான் அவர் இழந்திருக்கிறார்.

எனவே அவர் வன்னியர் சமுதாயத்தை பற்றி கூறுவது எல்லாம் தனக்காகவும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் தான். இந்த மக்களுக்காக நிரந்தரமாக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் முதல்வர் கருணாநிதி தான் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+