மேரக் கப்பலில் மாபெரும் அவலத்தில் தமிழர்கள்- மெளனமாக உலக சமுதாயம்

இலங்கையில் இனியும் வாழ முடியாது என்று முடிவெடுத்து சிறிய கப்பலில் ஆஸ்திரேலியா நோக்கி பயணித்த அந்தத் தமிழர்களை, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் உத்தரவுக்கிணங்க இந்தோனேசிய கடற்படையினர் கடந்த 11-10-2009 அன்று நடுக் கடலில் மடக்கி, மேரக் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அன்று முதல் இன்று வரை அந்த அப்பாவித் தமிழர்கள் கப்பிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களில் ஒருவர் நோய் தாக்கி உயிரையும் பறி கொடுத்து விட்டார். ஆனால் இன்னும் உலக சமுதாயமும், ஆஸ்திரேலிய அரசும், ஐ.நா. சபையும் பாராமுகமாகவே உள்ளன.
விளைவு - கொடும் நோய்களாலும், தொற்று நோய்களாலும் பாதிக்கப்பட்டு ஏராளமான சிறார்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சிகிச்சைக்கும் வழியில்லாமல் போகும் மாபெரும் அவலத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 100 நாட்களாக தவித்துக் கொண்டிருக்கும் அவர்கள் குறித்து எந்த ஒரு நாடும் பரிதாபமோ, கவலையோ, பச்சாதாபமோ காட்டாமல் இருப்பது மாபெரும் வியப்பாக உள்ளது.
நிறைமாத கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலை இதுவரை உலகம் கண்டிராத மாபெரும் அக்கிரமமாகவே உள்ளது.
ஊடகங்கள் இவர்கள் குறித்து எத்தனையோ முறை செய்திகளை வெளியிட்டு விட்டன, புகைப்படங்களும், வீடியோ காட்சிகளையும் காட்டி விட்டன. பாரீர், இந்த அப்பாவிகளின் நிலையை என்று அவர்கள் பலமுறை அடித்துக் கொண்டும் யாரும் இதுவரை அவர்கள் குறித்து ஒரு நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது உண்மையிலேயே வேதனையான ஒரு விஷயம்.
இது ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறது இந்தோனேசியா. ஆஸ்திரேலியாவோ, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கையில்தான் இவர்களின் எதிர்காலம் உள்ளது என்று தட்டிக் கழிக்கிறது. பான் கி மூன் தலைமையில் இயங்கும் ஐ.நா. சபையோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் செத்துப் போய்க் கிடக்கிறது.
நாம் என்ன பாவம் செய்தோம், வாழ வழியில்லாத நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல விரும்பியது மாபெரும் குற்றமா என்ற வேதனையில் குமைந்து போய்க் கிடக்கின்றனர் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள். இவர்களைக் காக்க வழியில்லாமல், வழி தெரியாமல் உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் செய்வதறியாமல் கையைப் பிசைந்து வருத்தத்தில் உறைந்து கிடக்கின்றனர்.
சொறி, சிரங்கு, வயிற்றுப்கோக்கு மற்றும் இன்னும் பல்வேறு நோய்த் தாக்குதல்களில் சிக்கி பரிதவிக்கும் அப்பாவிச் சிறார்களின் புகைப்படங்ளை ஈழ தமிழ் இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது. அவற்றைப் பார்க்கும்போது யாருக்குமே கண்ணில் ரத்தம் கசியும்.
கடுமையான காலநிலை சீர்கேட்டாலும் அசாதாரண கடல் அலைகளாலும் அதிகப்படியாக உருக்குலைந்து போயிருக்கும் அந்தக் கப்பலும் எந்த நேரத்திலும் இவர்களை கைவிட்டுவிட கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது.
தொடர்ந்து வீசி வரும் கடல் அலைகளால் கப்பல் ஆடியதால் கப்பலுக்குள் இருந்த மூன்று பேர் தடுமாறி விழுந்து காயப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூட அங்கு வசதியில்லாத பேரவலம்.
ஆஸ்திரேலியாவின் அந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி மீட்டது போல இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையிலும், யாரும் பாராமுகமாக இருப்பது தமிழர்களை வேதனையடையச் செய்துள்ளது.
ஹெய்தியில் இறப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல. அவர்களுக்காக மட்டும் உலக சமுதாயம், செத்துக் கொண்டிருக்கும் உயிர்களைக் காக்க முயலாமல், கண்டு கொள்ளாத தன்மையுடன் இருப்பது மனித நாகரீகத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் நிச்சயம் உகந்ததல்ல.
உலக சமுதாயம் இந்த அப்பாவிகளைக் காக்க முன்வருமா...?












Click it and Unblock the Notifications