ஆடிட்டர் மனைவி கொலை: தோழி-டிரைவரிடம் விசாரணை

சென்னை அசோக்நகர் 18வது அவென்யூவை சேர்ந்தவர் ஆடிட்டர் சுப்பிரமணியம். இவரது மனைவி கலா (42) இவர்களுக்கு தியாகராஜன் (20) என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் அந்த பகுதியில் உள்ள சாய்பிரசாந்த் அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் வசித்து வருகின்றனர்.
கலா தினமும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள உடற் பயிற்சி கூடத்திற்குச் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினமும் அதுபோல சென்றவர் பிற்பகலில் வீடு திரும்பினார்.
அப்போது அவரை ஒரு நபர் கத்தியால் குத்தியுள்ளார். கலாவின் அலறல் சப்தம் கேட்டு எதிர் வீட்டில் குடியிருக்கும் பெண்ணும் அவரது 10ம் வகுப்பு படிக்கும் மகனும் வெளியே வந்து பார்த்தனர். கருப்பு பேண்ட், கருப்பு டி-சர்ட் அணிந்த வாட்டசாட்டமான வாலிபர் ஒருவர் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடினான்.
மர்ம வாலிபரை குடியிருப்பு காவலாளியும் பார்த்தார். அந்த வாலிபர் யார் கையிலும் சிக்காமல் ஓடி மறைந்தார். அப்போது அங்கு வந்த கலாவின் மகன், தியாகராஜன் கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். வரவேற்பறையில் கத்தி குத்து காயங்களுடன் தனது தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தக் கொலை குறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல் கட்ட விசாரணையில் உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
கலா மூலமாக அவரது தோழி ஒருவரும் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அங்குள்ள பயிற்சியாளர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் வரம்பு மீறிப் பழக ஆரம்பித்துள்ளனர்.
இது அந்தப் பெண்ணின் வீட்டில் தெரிய வர பெரும் பிரச்சனையாகி, கலாவிடம் அவர்கள் சண்டை பிடித்துள்ளனர்.
இதையடுத்து கலாவும் சம்பந்தப்பட்ட அந்த பயிற்சியாளரை திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தப் பயிற்சியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
எனவே அந்தத் தோழி, பயிற்சியாளர் ஆகியோரிடமும், கலாவின் வீட்டில் வேலை பார்த்து 20 நாட்களுக்கு முன் நீக்கப்பட்ட டிரைவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் கலா பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த போலீசார் கலாவிடம் கடைசியாக பேசிய நபர் யார் என்பதை கண்டுபிடித்து, கடைசியாக அவர் உறவினர் பிரியா என்பவரிடமும், தனது தோழி புவனா மற்றும் அவரது கணவரிடமும் பேசியிருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போதுதான், கலாவுக்கு உடற்பயிற்சி நிறுவனத்தில் உள்ள சிலர் எதிராக இருந்தது பற்றிய தகவல் கிடைத்தது.
கலாவுக்குத் தெரிந்தவர்தான் கொலையாளியாக இருக்க முடியும் என்றும் போலீஸார் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications