கணவர் உடலைப் பெற பணம் இல்லாததால் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
மதுரை: மருத்துவமனையில் உயிரிழந்த கணவரின் உடலைத் தர வேண்டுமானால், சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கறாராக கூறியதால் மனம் உடைந்த பெண் தனது இரு குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு முன்பே தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (51). திருமங்கலம் கோர்ட்டில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நிர்மலா, மகன் கார்த்திக், மகள் நந்தினி. மகனும், மகளும் என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சந்தானம் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதற்கான கட்டணமாக சந்தானம் குடும்பத்தினர் 7 லட்ச ரூபாய் செலுத்தினார்கள். ஆனால் சிகிச்சைக்குப் பின்னர் சந்தானம் உயிரிழந்தார்.
இந்த நிலையில் உடலைக் கொடுக்காமல், மேலும் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
ஏற்கனவே 7 லட்சம் ரூபாயைக் கொட்டி சிகிச்சை அளித்தும் கணவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற வேதனையில் இருந்த சந்தானத்தின் மனைவி இதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
நீங்கள் கேட்கும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால் பணத்தைக் கொடுத்தால்தான் உடலைத் தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறவே, அப்படியனால், அழகர் கோவில் மலைக்குச் சென்று தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறி விட்டு தனது இரு குழந்தைகளுடன் கிளம்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அழகர்கோவில் மலைக்கு போலீஸ்காரர்கள் விரைந்தனர்.
மேலும், அதே மருத்துவமனையின் 2 ஆம்புலன்ஸ் வேன்கள் மற்றும் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வேன் ஆகியவையும் அழகர்கோவிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
மலைப் பகுதியில் போலீசார், கோவில் ஊழியர்கள், சுற்றுப் பகுதி மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே, பணம் எதுவும் வேண்டாம், சந்தானத்தின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி மருத்துவமனை நிர்வாகம் நிர்மலாவின் நெருங்கிய உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தது.
அழகர்கோவில் பகுதியை போலீஸார் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்த நிலையில் மறுபுறம், நிர்மலா, கார்த்திக், நந்தினி ஆகிய மூவரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரகளை சாப்பிட்டு விட்டு அதே மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை வந்தனர்.
அங்கு வந்ததும் கீழே விழுந்தனர். உடனடியாக மூன்று பேரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
அவர்கள் மூன்று பேரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் தானே பிரசவம் பார்த்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனை கூடுதல் சிகிச்சைக் கட்டணம் கேட்டதால் அதே மருத்துவமனை முன்பு மூன்று பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications