820 செல்போன்களை திருடிய 9 பெண்கள்!
சென்னை: பிரபல தனியார் நிறுவனத்தின் குடோனுக்குள் புகுந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்த 9 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, போரூர் அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனின் மேற்கூரை பகுதி உடைக்கப்பட்டு ரூ.25 லட்சம் மதிப்புள்ள 820 செல்போன்கள் கொள்ளை போனதாக புகார் தரப்பட்டது.
போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஓட்டேரியை சேர்ந்த சுசிலா (38) என்ற பெண்ணிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
மேலும் அவரிடம் விசாரித்ததில் உண்மை வெளியானது. சுசிலா, தன்னுடன் முருகன் (28), நாகராஜன் (35), பார்த்திபன் (34), மேரி (40), அம்மு (34) ஆகிய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு காட்டுப்பாக்கம் குடோனில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்களை திருடியது தெரியவந்தது.
இந்த கும்பல் முதலில் குடோனில் இருந்த பார்சல்களை யாருக்கும் தெரியாதபடி பிரித்து முதலில் 520 போன்களை திருடியுள்ளது. பின்னர், ஓட்டேரியில் உள்ள மற்றொரு கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த பாத்திமா (35)விடம் இதுபற்றி சுசிலா கூறியுள்ளார்.
பாத்திமா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மேலும் 300 செல்போன்களை திருடிச்சென்றுள்ளார். இதையடுத்து சுசிலா, பாத்திமா மற்றும் அவர்களின் கூட்டாளிகள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவரிகள் என மொத்தம் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கும்பலில் சுசிலா, பாத்திமா உட்பட ஒன்பது பேர் பெண்கள். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 450 செல்போன்கள் மீட்கப்பட்டன. 370 செல்போன்களுடன் தலைமறைவான பழைய இரும்பு வியாபாரி லத்தீப்பை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்பேடு கடைகளை உடைத்து கொள்ளை:
இந் நிலையில் நள்ளிரவிலும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில், லாரியில் வந்த மர்மகும்பல் கடைகளை உடைத்து மளிகை மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில் ஏ, பி பிளாக்கில் மளிகைக்கடை, செல்போன் கடை உள்பட 6 கடைகள் அடுத்தடுத்து உள்ளன.
இதன் உரிமையாளர்கள் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இப்பகுதிக்கு லாரி ஒன்று வந்தது.
மின்னல் வேகத்தில் லாரியில் இருந்து ஒரு கும்பல் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே குதித்து, முதலில் மளிகைக் கடையை உடைத்து உள்ளோ புகுந்தனர்.
உள்ளே இருந்த பொருட்களை அசுர வேகத்தில் லாரியில் ஏற்றினர். பின்னர் அடுத்தடுத்துள்ள 5 கடைகளையும் உடைத்து பொருட்களை மூட்டை கட்டி லாரியில் ஏற்றினர்.
அங்கிருந்த ஒரு செல்போன் கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், ரூ.3 ஆயிரம் பணத்தையும் அக்கும்பல் வாரி சுருட்டிச்சென்றது.
தகவல் அறிந்ததும் கடைக உரிமையாளர்கள் கோயம்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications