புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே.சிங் நியமனம்

தற்போதைய தளபதி தீபக் கபூர் வருகிற மார்ச் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் வி.கே.சிங் அப்பொறுப்புக்கு வருகிறார்.
பணி நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு சிங் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து சிங், புதிய ராணுவத் தலைமைத் தளபதியாகிறார் சிங்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதன்சு கர் கூறுகையில், 59 வயதாகும் லெப்டினென்ட் ஜெனரல் வி.கே.சிங், புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுகிறார். இவர் 2 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார்.
ராணுவத்தின் ராஜ்புட் படைப் பிரிவின் 3ஆம் தலைமுறை அதிகாரி இவர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சியாச்சின் ஆகிய பகுதிகளில் நேரடிப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங் மாவட்டத்தில் நில ஊழலில் ஈடுபட்ட நான்கு ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் சிங் என்பது நினைவிருக்கலாம்.
வெல்லிங்டன் பாதுகாப்புப் படையினர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர் சிங். அதேபோல அமெரிக்காவில், அமெரிக்க ராணுவ போர் கல்லூரியில் ரேஞ்சர்ஸ் கோர்ஸையும் முடித்துள்ளார்.
1970ம் ஆண்டு 2வது ராஜ்புட் ரெஜிமென்ட்டில் பணியில் சேர்ந்தார். பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு இந்தப் படை அனுப்பப்பட்டபோது அங்கு பணியாற்றினார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
இலங்கையில்...
இலங்கையில் அமைதி காக்கச் சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் இடம் பெற்றிருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் பவன்' நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக யுத்த சேனா பதக்கம் இவருக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications