ஆளுநர் பர்னாலாவின் செயலாளர் திடீர் மாற்றம்!
சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் செயலாளர் திடீரென மாற்றப்பட்டு, வேறு துறை எதுவும் ஒதுக்கப்படாமல் உள்ளார்.
ஆளுநரின் புதிய செயலாளராக ரமேஷ்ராம் மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தமிழ்நாடு உப்புக்கழக இயக்குனர் பொறுப்பை வகித்து வருபவர்.
ஆளுநரின் செயலாளர் பதவியில் இருந்து திடீர் மாற்றம் செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு இதுவரை புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
ஹன்ஸ்ராஜ் வர்மா பதவியில் இருந்து மாற்றப்பட்டதற்கான காரணமும் தெரியவில்லை என தலைமைச் செயலக வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றன.
ஆந்திர ஆளுநர் பதவியேற்பு:
இந் நிலையில் ஆந்திர ஆளுநராக நரசிம்மன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி தனது பதவியை கடந்தாண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆந்திர மாநில புதிய ஆளுநராக நரசிம்மன் நியமிக்கப்பட்டார்.
ஹைதராபாத் ராஜ்பவனில் இன்று நடந்த விழாவில் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் தவே, நரசிம்மனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திர முதல்வர் ரோசையா, மாநில அமைச்சர்கள் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் ஆளுநராக சிவராஜ் பட்டீல் பதவியேற்பு:
அதே போல பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சிவராஜ் பாட்டீலும் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முகுல் மவுட் கில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கும் பாட்டீலே நிர்வாக ஆளுநர் பொறுப்பை வகிப்பார்.












Click it and Unblock the Notifications