செய்தி சேனல்களில் விளம்பர வருவாய் - ரூ.1,800 கோடியை தாண்டும்

டெல்லியில் உள்ள சிஎம்எஸ் (சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பரத் தொழில் சந்தை மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 16 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில் செய்தி சேனல்களின் வர்த்தகம் 100 கோடியாக இருந்தது. 2009ல் இது ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்து விட்டது. நடப்பாண்டில் இந்த அளவு 13 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதிகமான செய்திச் சேனல்களின் வருகையே இந்த ஏற்றத்துக்கு காரணம். கடந்த ஒன்பதாண்டுகளில் சேனல்களின் எண்ணிக்கை 48 மடங்கு கூடியுள்ளது. இதனால் பார்வையாளர்களும், வருவாயும் சேர்ந்து அதிகரித்துள்ளது.
சமீப காலமாக தேர்தல் விளம்பரங்கள் மூலம் செய்தி சேனல்கள் நல்ல லாபம் பெறுகின்றன. 2009ம் ஆண்டு வாக்கில் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட சமயங்களில் அரசியல் விளம்பரங்கள் தான் சேனல்களுக்கு கைகொடுத்துள்ளன.
அரசியல் செய்திகளுக்கு கூடுதல் மவுசு:
கடந்தாண்டு செய்தி சேனல்களில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் அரசியல் தொடர்பான செய்திகளை அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். கிரைம் செய்திகளுக்கு பார்வையாளர்கள் குறைவாக இருந்துள்ளனர்.
கடந்த 2005க்கு பிறகு செய்திச் சேனல்களில் அரசியல் நிகழ்ச்சிகள் சற்று தொய்வை சந்தித்தாலும், 2009ல் அரசியல் நிகழ்ச்சிகளே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
சேனல்களில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் 2005ல் அரசியல் செய்திகள் சுமார் 23.1 சதவீதமாக இருந்தது, 2009ல் 20.36 சதவீதமாக குறைந்துள்ளது. கிரைம் செய்திகள் 2007ல் 11.86 சதவீதமாக இருந்தது, 2009ல் 4.86 சதவீதமாக சரிந்துள்ளது.
பொழுதுபோக்கு செய்திகள் 2005ல் 6.1 சதவீதமாக இருந்து, 2007ல் 16.15 சதவீதமாக உயர்ந்து பின்னர் 2009ல் 10.13 சதவீதமாக குறைந்துள்ளது.
நிகழ்ச்சிகளின் பொருளடக்கத்தை பொறுத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. அரசியல், விளையாட்டு பொழுதுபோக்கு போன்ற அடிப்படையான நிகழ்ச்சிகளே இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications