இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்: ஆஸி எதிர்க்கட்சி தலைவர் வருத்தம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்து இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருவது கவலை தருவதாக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டோனி அப்பாட் இதுகுறி்த்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாவது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய விஷயம்.
இதுபோன்ற சம்பவங்களால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைகிறது.
மேலும், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் வெறுக்கப்படுகிறார்கள் என்ற எண்ணம் உலகெங்கும் பரவிவிடும்.
திறமையையும், அறிவையும் பார்ப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலிய மக்கள், தோலின் நிறத்தை பார்க்கிறார்கள் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டுவிடும்.
இது சட்ட அமலாக்கப் பிரச்னையை விட மோசமான விவகாரமாகி விடும். எனவே இவ்விஷயத்தில் அரசு தன் கொள்கை மற்றும் நடவடிக்கைகளில் கூடுதல கவனம் செலுத்த வேண்டும்.
சமீபத்திய தாக்குதல் நிகழ்வுகள் குறித்து சிலர் கூறுகையில், ரொக்க பணத்துடன் நடந்து செல்லும் நபர்களிடம் தான் வழிப்பறி நடப்பதாக கூறப்படுகிறது.
அப்படியானால், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் சுகபோகமான செல்வந்தராக இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் உருவாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியருக்கு ஆஸ்திரேலிய அரசு விருது
இதற்கிடையே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரால்ஃப் மார்ட்டின்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், '2010ம் ஆண்டின் ஆஸ்திரேலியர்' விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேற்கு ஆஸ்திரேலியே மாகாண அரசு இவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதர் பீட்டர் வர்கீஸ் கூறுகையில், 'அல்ஸீமர்ஸ்' எனப்படும் மூளைக் கோளாறு நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ரால்ஃப் மேற்கொண்டு வருகிறார்.
ஆஸ்திரேலிய மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியர் ரால்ஃப் அளித்துள்ள பங்களிப்பை போற்றி அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுக்கு அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்நோய் தொடர்பான ஆய்வு முடிவுகளை இந்திய நிபுணர்களுடனும் ரால்ஃப் பகிர்ந்துகொண்டு, கூட்டு ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
தற்போது இந்தியாவில் அல்ஸீமர்ஸ் மற்றும் அதைச் சார்ந்த நோய் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஏஆர்டிஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து ரால்ஃப் பணியாற்றி வருகிறார்.
வரும் 25ம் தேதி கான்பெரா நகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விருது பெறுவோரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஆய்வாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications