மணப்பெண் ஓட்டம்- பரிதவித்த மாப்பிள்ளை - திடீர் மணமகளுடன் கல்யாணம்
சென்னை: காதலனை மணப்பதற்காக திருமண வீட்டில் இருந்து வெளியேறிய மணமகள் போலீஸ் உதவியடன் பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏமாற்றமடைந்த மாப்பிள்ளைக்கு 'திடீர்' மணமகளுடன் திருமணம் நடந்து முடிந்தது.
சென்னையை அடுத்த நீலாங்கரை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பிரியா (19). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தன்னுடன் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த பாஸ்கரை (28) காதலித்து வந்தார். ஆனால் பிரியாவிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட்டனர்.
மேலும் பிரியாவிற்கு மாப்பிள்ளையாக சொந்த தாய் மாமனையே தேர்வு செய்தனர். இது பிரியாவிற்கு பிடிக்காததால் பெற்றோருடன் சண்டை போட்டார்.
தனது காதலனிடமும் தகவலைக் கூறி, எங்காவது ஓடி விடலாமா என கேட்டார். ஆனால், காதலன் பாஸ்கர் பொறுத்திருக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் பிரியாவிற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்தினம் இரவு மண்டபத்தில் திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.
அப்போது அலங்காரம் செய்ய பியூட்டி பார்லருக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிரியா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் பிரியா கிடைக்காததால் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.
இதற்கிடையே, வீட்டை விட்டு வெளியேறிய பிரியா பெரம்பூரில் உள்ள காதலன் பாஸ்கர் வீட்டுக்கு சென்றார். அங்கு பாஸ்கரின் தாயார் லில்லி மட்டும் இருந்தார்.
லில்லியிடம் நடந்ததை கூறினார் பிரியா. அதிர்ச்சி அடைந்த லில்லி பிரியாவை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
போலீசார் விசாரித்த போது, 'பாஸ்கரைத் தான் திருமணம் செய்து கொள்வேன். இல்லை என்றால் செத்துப் போய் விடுவேன்' என கூறியுள்ளார்.
இதனால், போலீசார் காதலன் பாஸ்கரையும், பிரியாவின் பெற்றோரையும் வரவழைத்தனர். விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் மணமகள் இவ்வாறு நடந்துகொள்து முறையல்ல என பலர் அறிவுரை கூறியும் பலனில்லை.
தன்னை பாஸ்கருடன் அனுப்பிவைக்குமாறு போலீசாரிடம் பிரியா வலியுறுத்தினார். போலீசாரும் வேறு வழியில்லாமல் பிரியாவை பாஸ்கருடன் அனுப்பி வைத்தனர்.
பெரும் ஏமாற்றத்துடன் பிரியாவின் பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் தயாராக இருந்த மாப்பிள்ளை சோகமாக தனியறையில் அமர்ந்திருந்தார்.
அவருடையைக் கவலையைத் தீர்க்க ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பிரியாவின் சித்தி மகளை திடீர் மணமகளாக்கி திருமணத்தை நடத்தி முடித்தனர். இதனால் கல்யாணம் தடைபடாமல் நடந்து முடிந்தது.
அதேபோல, பிரியாவும் நேற்று காலை பெரம்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆசை காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications