மறைந்த ஜோதிபாசுவுக்கு பாரத ரத்னா விருது - மத்திய அரசு முடிவு

ஜோதிபாசு உயிருடன் இருந்தபோதே 2 முறை பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் அதை அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான ஜோதிபாசு, மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பில் இருந்தவர்.
மேற்குவங்கத்தில் நில சீர்திருத்தம், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறை, மதச்சார்பற்ற அரசு நிர்வாகம், கம்யூனிச கொள்கை பற்று போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஜோதிபாசுவை அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றவர்.
மேற்குவங்கத்தில் தொழில் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தவர் என எதிர் முகாமினரால் விமர்சிக்கப்பட்டாலும், அரசியல் தளத்தில் பல மைல்கல் முத்திரைகளை பதித்து, அரசியல் ஒழுக்கமும், நிர்வாக திறமையும் ஒருங்கே பெற்றவர் ஜோதிபாசு.
2004ம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமரான போதும், அதற்கு முன்னர் வாஜ்பாய் அரசின் போதும் ஜோதிபாசுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் விருதை ஏற்க ஜோதிபாசு மறுத்துவிட்டார்.
தற்போது மறுப்பு தெரிவிக்க ஜோதிபாசு உயிருடன் இல்லாத நிலையில், அவரின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தின விழாவுக்கு முந்தைய நாள் விருது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications