உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மலேசியக் குழு பங்கேற்கும் - ரஸ்ஸாக்

மலேசியப் பிரதமர் ரஸ்ஸாக் தலைமையிலான உயர் மட்டக் குழு சென்னை வந்திருந்தது. சென்னைக்கு அரசு முறைப் பயணமாக மலேசியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
நேற்று சென்னையில் இந்திய தொழில் வர்த்த சம்மேளனத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார் ரஸ்ஸாக். பின்னர் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை ரஸ்ஸாக் தலைமையிலான மலேசியக் குழுவினர் சந்தித்துப் பேசினர். முதல்வர் கருணாநிதியுடன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது முதல்வர் பேசுகையில்,
மலேசிய பிரதமர், அங்குள்ள அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களையும் குறிப்பாக இந்திய வம்சாவளியினரையும் சமமாகப் பாவித்து அவர்களுக்குரிய நல்வாய்ப்புகளை வழங்குவதற்காக எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டுகிறேன்.
இந்த நடவடிக்கைகள் மலேசியாவிலே உள்ள இந்திய வம்சாவளியினர்களுக்கும் மற்ற இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்.
1999-ம் ஆண்டு மலேசியாவின் பிரதமராக மகாதீர் முகமது இருந்த போது நான் மலேசியாவிற்கு வந்துள்ளேன். இரண்டு நாடுகளுக்கும் பயனுள்ள பல்வேறு கருத்துகளை அவருடன் அப்போது பகிர்ந்து கொண்டோம். தங்களுடைய இந்தப் பயணமும் இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள உறவினை மேலும் வலுப்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துவதற்கான ஏற்பாட்டினை செய்து வருகிறோம். முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. தமிழ் மொழி தொன்மையான பேச்சு வழக்கத்திலே உள்ள மொழி. மத்திய அரசு தற்போது இதற்கு செம்மொழி தகுதியினை வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சான்றோர்கள் பலர் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதோடு, ஆய்வுக் கட்டுரைகளை வழங்கவும் முன்வந்துள்ளார்கள். முதல் உலகத் தமிழ் மாநாட்டினை நடத்திய மலேசிய நாட்டில் இருந்து தங்கள் தலைமையில் ஒரு குழு இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தெற்காசிய பகுதியில் மருத்துவத் துறையிலே அனைத்து வசதிகளையும் கொண்டதாக தமிழ்நாடு விளங்குகின்றது. உலகத் தரத்தில் சிகிச்சை அளிக்கக்கூடிய மிகச்சிறந்த மருத்துவமனைகள் இங்கே உள்ளன.
மேலும், சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய முக்கியமான இடமாகவும் தமிழ்நாடு இருப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து சிகிச்சைக்காகவும், ஓய்வுக்காகவும் வெளிநாட்டினர் அடிக்கடி வந்து செல்கின்றனர். எனவே, தமிழகத்திலே உள்ள மருத்துவ வசதிகளை மலேசிய நாட்டினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிக் கொள்கிறேன்.
சிறந்த உயர் கல்வியை வழங்கக்கூடிய கட்டமைப்பினைக் கொண்டு உள்ளதாக தமிழ்நாடு தற்போது திகழ்கிறது. குறிப்பாக தொழிற்கல்வி பயில ஏற்ற இடமாக தமிழகம் விளங்குகின்றது. இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற உயர் கல்வி அமைப்புகளோடு மலேசிய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முன்வர வேண்டும்.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருந்த போதிலும், தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 நிறுவனங்கள் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிலகங்களை தமிழகத்திலே நிறுவ முன்வந்துள்ளன. இந்தத் திட்டங்களுக்கான சிறப்பு சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு தனிச் சலுகைகளும் அரசினால் வழங்கப்படுகின்றன. மலேசியாவிலே உள்ள தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கட்டமைப்புப் பணிகளில் மலேசிய நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்றார்.
பின்னர் தன்னுடன் வந்த பிரதிநிதிகளை முதல்வருக்கு ரஸ்ஸாக் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பிறகு அவர் கூறுகையில், மலேசியாவில் இந்தியர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னுடைய தலைமையில் அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அமைத்திருப்பதாகவும், தமிழகத்திற்கு வெளியே மிக அதிகமாக தமிழ் பள்ளிகள் மலேசியா நாட்டிலேதான் இருப்பதாகவும், அந்தப் பள்ளிகளுக்கு அதிக நிதியினை அரசின் சார்பில் ஒதுக்குவதாகவும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று மலேசிய அரசின் சார்பில் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அனுப்புவதாகவும் உறுதியளித்தார்.
சுல்தான் மறைவால் நாடு திரும்பினார் ரஸ்ஸாக்...
இந்த நிலையில், நாளை நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த ரஸ்ஸாக் நேற்று இரவு தனது பயணத்தை ரத்து செய்து விட்டு மலேசியா கிளம்பிச் சென்றார்.
ஜோஹார் மாகாண சுல்தான், சுல்தான் இஸ்கந்தர் இப்னி அல்மர்ஹம் சுல்தான் இஸ்மாயில் மரணமடைந்ததைத் தொடர்ந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக நாடு திரும்பினார் ரஸ்ஸாக் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று இரவு ரஸ்ஸாக்கும், அவருடன் வந்த வர்த்தக் குழுவினரும் தாங்கள் வந்த சிறப்பு விமானம் மூலம் மலேசியா கிளம்பிச் சென்றனர்.
ஜனவரி 19ம் தேதி ரஸ்ஸாக் இந்தியா வந்தார். தனது இந்திய பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார்.
சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications