வேலையில்லாததால் விரக்தி - முதல்வர் வீடு அருகே இளைஞர் தற்கொலை
சென்னை: வேலையில்லாத விரக்தியால், முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு அருகே சேலத்தைச் சேர்ந்த இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் எம்.சுரேஷ். 25 வயதான இந்த இளைஞர் நேற்று காலை கான்ரான் ஸ்மித் சாலையில், முதல்வர் வீடு அருகே உள்ள மைதானப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
சுரேஷ் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த ஆண்டு கல்யாணம் ஆனது. வேளச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். வேலையில்லாமல் தவித்து வந்த அவர் வேலை கோரி இரண்டு முறை முதல்வர் குறை தீர்ப்புப் பிரிவில் மனு கொடுத்துள்ளார்.
மேலும் நேற்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து மனு அளி்ப்பதற்காக கோபாலபுரம் இல்லம் வந்ததாக தெரிகிறது. ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரை இங்கு வைத்து முதல்வரை சந்திக்க முடியாது என்று கூறி தடுத்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து மனம் உடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கணவர் வேலையில்லாமல் இருப்பதால் வெறுப்பாகி அவரது மனைவி வாசுகி (22) சமீபத்தில்தான் சுரேஷை விட்டுப் பிரிந்து போனதாக கூறப்படுகிறது. இதனாலும் சுரேஷ் பெரும் மன வருத்தத்துடன் இருந்து வந்தாராம்.












Click it and Unblock the Notifications