எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதிர்ச்சி போதாது: கூறுகிறது பாக்.
இஸ்லாமாபாத்: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை முதிர்ச்சி இல்லாதவர் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், இந்தியாவின் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் எனவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல்பாசித் கூறியுள்ளார்.
மும்பையில் 26/11 தாக்குதல் நடந்தது போல இந்தியாவில் இன்னொரு முறை தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிச்சயம் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் அபாயம் குறித்து ராபர்ட் கேட்ஸ் குறிப்பிட்டார். இதனால் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி, 'இந்தியாவில் 26/11 போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு பாகிஸ்தான் உத்தரவாதம் தர முடியாது' என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, 'மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒருமுறை சம்பவம் இந்தியாவில் நடந்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரிய விரிசல் விழுவதை தவிர்க்க முடியாது' என கூறியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் இஸ்லாமாபாத்தில் பேட்டி அளிக்கையில்,
'மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் உள்ளூர் மக்களின் உதவியில்லாமல் நடந்தேறவில்லை. இதன் பின்னணியில் உள்ள நடைமுறை உண்மைகளை கிருஷ்ணா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து, பாகிஸ்தானுடன் உறவு விரிசலாகும் எனக் கூறுவது அவரின் முதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகிறது. அவர் தெரிவித்திருப்பது முதிர்ச்சியற்ற ஒரு கருத்து.
அதோடு, எந்த விதமான மிரட்டல் விடு்த்தாலும், எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்.
உண்மையில் பாகிஸ்தான் தான் தீவிரவாதத்திற்கு பலியாகி வருகிறது. இதனால், தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் தான் அதிக கவனத்துடன் செயல்பட்டுவருகிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications