19 வருட துயரங்கள் போதும், விடுவியுங்கள்: நளினி கண்ணீர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக நான் 19 வருட காலமாக தனிமைச் சிறையில் சித்திரவதைப்பட்டது போதும், என்னை இனியாவது விடுவியுங்கள் என்று மிகவும் உருக்கமாக கோரியுள்ளார் நளினி.

யாரோ செய்த பாவத்துக்காக நான் தண்டனை அனுபவிப்பது என்ன நியாயம் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கேட்டுள்ளார்.

தன்னை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகினார் நளினி. இதுகுறித்து சிறை ஆலோசனைக் கமிட்டியை அமைத்துப் பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் இதுகுறித்து வேலூர் மகளிர் சிறைக்கு நேரில் சென்று நளினியிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அரசிடம் தனது அறிக்கையை ஓரிரு நாளில் சமர்ப்பிப்பேன் என்று கூறியுள்ளார் ராஜேந்திரன்.

ஆட்சித் தலைவர் தன்னை சந்தித்தபோது அவரிடம் 8 பக்க மனுவைக் கொடுத்துள்ளார் நளினி. இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி...

ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்ப்பந்தம்:

நானும், எனது கணவரும் 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டோம். போலீஸ் காவலில் கிட்டத்தட்ட 60 நாட்கள் வைக்கப்பட்டிருந்தோம். அந்த சமயத்தில் நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டோம். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

எங்களை பலிகடாவாக்கும் வகையில் அந்த ரெடிமேட் ஒப்புதல் வாக்குமூலம் இருந்தது.

1992ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி எனக்கு சிறையிலேயே பெண் குழந்தை பிறந்தது. எனது குழந்தையை ஒருமுறை கூட பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை. ஒரு ஆயுள் தண்டனைக் கைதி வருடத்திற்கு மூன்று முறை பரோலில் செல்ல சட்டத்தில் இடமுண்டு. ஆனால் கடந்த 19 வருட காலமாக நான் ஒரு முறை கூட பரோலில் விடுவிக்கப்படவில்லை.

2000மாவது ஆண்டில், எனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்கலாம் என்று சோனியா காந்தி அளித்த பரிந்துரை, 2009ம் ஆண்டில் பிரியங்கா காந்தி என்னை சிறையில் வந்து பார்த்தபோது, நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழும் நாளை எதிர்பார்க்கிறோம் என்று கூறியது, என எல்லாமே எனது நன்னடைத்துக்கு போதுமான சான்றுகளாகும்.

யாரோ செய்த பாவத்துக்கு எனக்குத் தண்டனை:

யாரோ சிலர் செய்த பாவத்துக்கு நான் தண்டனையை சுமந்து நிற்கிறேன். 19 வருட கால தனிமைச் சிறைக்குப் பின்னரும் கூட என்னை விடுவிக்க மறுப்பது நியாயமற்றதாகும்.

குற்றம் நடந்த இடத்தில் நான் இல்லாமல் இருந்திருந்தால், அந்தக் குற்றச் செயல் நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்குமா என்று நான் அன்று கேட்ட கேள்விக்கு இன்று வரை யாருமே பதிலளிக்கவில்லை. நடந்த கொற்றம் மிகவும் கொடுமையானது என்ற ஒரே காரணத்திற்காக என்னை விடுவிக்காமல் இருப்பது சரிதானா?.

இலங்கைத் தமிழரை மணந்து கொண்டது குற்றமா?

இலங்கைத் தமிழர் ஒருவரை நான் மணந்து கொண்டது குற்றமா என்று நான் கோர்ட்டிலேயே கேட்டேன். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பிலும் கூட, ராஜீவ் காந்தி கொலை சதித் திட்டம் குறித்து எனக்குக் கடைசி நிமிடம் வரை தெரியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பலமுறை உண்ணாவிரதம் உள்ளிட்ட சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்திப் பார்த்தும் விடுவிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்குப் பலன் கிடைக்கவில்லை. எனக்கு அரசியல் மட்டத்திலிருந்தோ, சமுதாயத்திலிருந்தோ, மத ரீதியாகவோ எந்த எதிரியும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது.

நான் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டுமா என்று கேட்டு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும், தினமணி நாளிதழும் நடத்திய கருத்துக் கணிப்பில் 75 சதவீதம் பேர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் நளினி.

கருத்துக் கூற கருணாநிதி மறுப்பு:

இதற்கிடையே, நளினி முன்கூட்டியே விடுவிக்கப்படுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்க மறுத்துள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது நளினி குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த முதல்வர், தமிழை விடுவிப்பது குறித்து பேச இங்கே கூடியிருக்கிறோம். நீஙகள் கேட்டது குறித்து நான் பேச விரும்பவில்லை. அதுகுறித்து முடிவெடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த வேலையை அது செய்து கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+