நில மோசடி: ஜேபிஜே சொத்துக்கள் விரைவில் முடக்கம் - ஜஸ்டின் மனைவிக்கு வலை
சென்னை: நிலமோசடி வழக்கில் சிக்கிய ஜே.பி.ஜே அதிபரின் சொத்துக்களை முடக்கப்பட உள்ளன. ஜே.பி.ஜே அதிபரின் மனைவியும் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
சலுகை விலையில் நிலம் வாங்கித் தருவதாகவும், வீடு கட்டித் தருவதாகவும் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை ஜே.பி.ஜே. ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் கைது செய்யப்பட்டார்.
தற்போது சென்னை அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசின் தலைமை அலுவலகத்தில் போலீஸ் காவலில் உள்ள ஜஸ்டின் தேவதாஸ், வரும் பிப்ரவரி 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
விசாரணையின் ஆரம்பத்தில் மழுப்பலான பதில்களையே அளித்து வந்த தேவதாஸ், தற்போது பல பயனுள்ள தகவல்களை கூறி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
ஜே.பி.ஜே. நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் 350 ஏக்கருக்கு மேல் நிலம் இருப்பதாக ஏற்கனவே ஜஸ்டின் கூறியிருந்தார். அந்த சொத்துகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்ற தகவலை அவரிடம் போலீசார் பெற்றுள்ளனர்.
அந்த சொத்துகள் ஜே.பி.ஜே நிறுவனத்துக்கு சொந்தமானதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் பிறகு ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வழக்கின் முக்கிய குற்றவாளியாக ஜஸ்டின் தேவதாசின் மனைவி பெல்லா சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் ஜே.பி.ஜே. நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தார்.
கர்நாடக போலீசார் ஜஸ்டின் தேவதாசை கைது செய்த உடனே அண்ணாநகரில் வாடகைக்கு இருந்த வீட்டை விட்டு பெல்லா தலைமறைவாகி விட்டார்.
அவருடைய செல்போன் நம்பர் கூட தெரியாது என்று ஜஸ்டின் தேவதாஸ் போலீசிடம் சாதித்து வருகிறார். எப்படியும் ஓரிரு நாட்களில் பெல்லாவை மடக்கி கைது செய்து விடுவோம் என்று போலீசார் உறுதியுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications